7 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்ய இலக்கு: வேளாண் இயக்குநர் தகவல்

தமிழகத்தில் நிகழாண்டு நெல் சாகுபடியில் 7 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு தானிய இயக்கம் தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவர் பேசியது:

உணவு தானிய உற்பத்தி திறன், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குதல் என்பதே நம் நோக்கம். விவசாயிகளை வேளாண்மைத் துறையினர் சந்தித்து அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி உற்சாகப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு 62 சதம் குறைவாக மழை பெய்ததால், வறட்சி பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசு சார்பில் அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. வழக்கமாக தமிழகத்துக்கு ரூ. 400 கோடி அல்லது ரூ. 500 கோடிதான் இழப்பீடு கிடைக்கும். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நிகழாண்டு தமிழகத்துக்கு ரூ. 2,262 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ. 1,650 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 1,550 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு செய்துள்ள எஞ்சிய விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பில் உள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்துள்ளதால், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. எனவே, நிகழாண்டு அதிக விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நெல் சாகுபடியில் கடந்த ஆண்டு 5 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டது. நிகழாண்டு ஏறத்தாழ 7 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு செய்தால் தண்ணீர் சிக்கனமாகும். எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளை நேரடி விதைப்பு செய்ய அனைத்து வேளாண்மை அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும் என்றார் தட்சிணாமூர்த்தி.

Newsletter