பழ மரச் சாகுபடியாளர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை

சமீபகாலமாக பழமரச் சாகுபடியாளர்கள் சாகுபடி செய்யும் கொய்யா, மாதுளை, எலுமிச்சைப் பயிர்களில் மறைந்திருந்து தாக்கும் எதிரியான நூற்புழுக்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தாக்குதலின் ஊற்றுக்கண் சாகுபடியாளர்கள் வாங்கும் நாற்றுக்களின் மூலமே இந்த எதிரிகள் தோட்டத்தில் எளிதில் உட்புகுகின்றன. எனவே இந்த நூற்புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

பழமர நாற்றுக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோதான் பெறப்படுகின்றன. பெரும்பாலும் விவசாயிகள் நேரில் சென்று பழமர நாற்றுக்களை வாங்குவதில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ தான் இந்த வியாபாரம் நடைபெறுகின்றது. அவர்களுக்கு நாற்றுக்கள் மூலம் புதிய பகுதிகளுக்குக் கடத்தப்படும் நூற்புழுக்கள் பற்றிய தெளிவு இல்லை, இருந்தாலும் அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.



விவசாயிகளும் இதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. நூற்புழு தாக்கிய நாற்றுக்களை நட்டு அவை சில வருடங்கள் கழித்துப் பெரிய பாதிப்பையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்தும் போதுதான் விழிப்படைகின்றனர். இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாகும். வருமுன்னர்க் காத்தல் என்னும் தாரக மந்திரம் நமது உடல் நோய்களுக்கு மட்டுமின்றி வேளாண் செயல்பாடுகளுக்கும் பொருந்தும்.

எனவே உழவர் பெருமக்கள் நாற்றுக்களை வாங்கும்போது நேரில் சென்று ஓரிரு நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களில் சிறிய வேர்முடிச்சுகள் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் நாற்றுக்களை வாங்கிப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



மேற்கண்ட தகவலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter