சாத்தனூர் அணையின் நீர்மட்டம்106 அடியாக உயர்வு

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளதால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் கிராமத்தில் அணை கட்டப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியதால் அதில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நீர், சாத்தனூர் அணைக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடியாகும். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 106.05 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இதில் தற்போது 4,716 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,875 கன அடியாக உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி: அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை ஓரிரு நாளில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter