வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்க வேளாண் பல்கலையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இயக்கம்

வேளாண் காடுகள் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு கருத்தரங்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மரம் சார்ந்த தொழிற்சாலைகள், விஞ்ஞானிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், இதர துறைகளை சார்ந்த அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், மர அறுவடை மற்றும் விற்பனைக் குழுக்கள், நிதி மற்றும் கிராமப்புற நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஏழு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர்.



வேளாண் காடுகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துறைத் தலைவருமான கா.த.பார்த்திபன் வரவேற்புரையாற்றி இக்கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் குளோனல் முறையில் மரம் வளர்ப்பு, மரம் அறுப்பு, விற்பனை செய்தல், மதிப்பு கூட்டல் ஆகிய மேம்பாடுகள் குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலை மரங்களான தேக்கு, குமிழ், சுபாபுல், மலைவேம்பு, கடம்பா, சவுக்கு, தைலம், மகாகனி மற்றும் வேம்பு மரங்களுக்கான விலை நிர்ணையம் பற்றி எடுத்து கூறினார்.

வனக்கல்லூரியின் முதல்வர் தீபக் ஸ்ரீவத்ஸ்வா கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வேளாண் காடுகள் மற்றும் வேளாண்- தோட்டக்கலை மற்றும் மரங்கள் ஒருங்கிணைந்து வளர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வனத்திற்கு வெளியே மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மர வகைகள் கண்டுப்பிடிக்கபட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் சென்னையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் குழுமமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி வேளாண் காடுகள் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு உயிர் எரிசக்தி சார்ந்த எரிகட்டி தயாரிக்கும் தொழில்நுட்பப் பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.



சிறு மற்றும் குறு தொழில் குழுமம் அமைப்பின் தலைவர் பாபு கூறுகையில், சிறிய அளவில் தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில் திறன் உருவாக்கம் பற்றிய பயிற்சியை தங்கள் நிறுவனம் வழங்குவதாகவும் இத்தகைய பயிற்சிகள் நமது பாரதப் பிரதமரின் “தூய்மை பாரதம்” மற்றும் “தொடங்கிடு இந்தியா” திட்டங்களோடு ஒத்துள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம) பேசுகையில் வேளாண் காடுகள் வளர்ப்பில் கன்றுகள் உருவாக்குபவர் முதல் கொள் முதல் செய்யும் நிறுவனங்கள் வரை ஒருங்கிணைக்கும் முயற்சி 2008 ஆம் ஆண்டே துவக்கப்பட்டு சிறிது சிறிதாக மாற்றம் செய்யப்பட்டு வேளாண் காடுகள் கூட்டமைப்பாக முன்னேறியுள்ளது. இதில் பயனாளிகள் அனைவரும் பொது மற்றும் தனியார் கூட்டமைப்பாக இணைக்கப்பட்டு தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் தேவைக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

இறுதியாக இரா. ஜுட் சுதாகர் நன்றியுரை வழங்கினார். பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அவரவர் நட்சத்திர ராசிக்குரிய மரக்கன்றுகள் நட்டனர்.

Newsletter