பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதன்கிழமை அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் புதன்கிழமை 3.6 மி.மீட்டரும், தேக்கடியில் 2 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், கடந்த 18 ஆம் தேதி (திங்கள்கிழமை) அணையில் இருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்கு கூடுதலாக விநாடிக்கு 999 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்நிலையில், புதன்கிழமை பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை மேலும் அதிகரித்து, விநாடிக்கு 1,400 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,156 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 127.40 அடியாகவும், நீர் இருப்பு 4,134 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

Newsletter