விவசாயிகளை விட்டு விலகும் வேளாண் அலுவலர்கள்! கேள்விக்குறியாகும் உணவு உற்பத்தி

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்க வேண்டிய வேளாண் அலுவலர்கள், அந்த பணியிலிருந்து மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் உணவு உற்பத்தி கேள்விக்குறியாகியுள்ளது.

வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி, அதன் மூலம் உற்பத்தியை பெருக்கி, உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டியதே வேளாண்மைத் துறை அமைக்கப்பட்டதன் நோக்கம். இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள், விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்காக (மனைகள், தொழில்சாலைகள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள்) மாற்றப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்த சூழலில், தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக வேளாண்மை உற்பத்தி திறன் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி, அதற்கு ஏற்ப குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டிய தமிழக வேளாண்மைத் துறை அதன் பாதையிலிருந்து விலகிச் செல்வதாக விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கரும்பு ஆலைகள் இயங்குவதற்கு தேவையான கரும்பு உற்பத்தி செய்யப்படாததால், பல ஆலைகளில் உள்ள அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்யும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 30ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கரும்பு பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்குவதற்கு அரசு சார்பில் ரூ.30 கோடிக்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் இல்லாமல் மக்கள் போராடி வரும் நிலையில், 10 மாதங்கள் தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும் கரும்பு சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள்தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என வேளாண்மைத் துறை மற்றும் கரும்பு ஆலை நிர்வாகிகள் மீதான நிர்பந்தம், விவசாயிகளையும் பாதிப்பதாக உள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டம்...

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு, அந்தந்த பகுதியில் உள்ள பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் மூலம் கடந்த காலங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளில் தற்போது வேளாண்மை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் காப்பீட்டு நிறுவன முகவர்கள் இல்லாத சூழலும், இருக்கும் இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் நிலையும் உள்ளது. காப்பீட்டு பணிகள் மீது வேளாண்மை அலுவலர்கள் முழு கவனம் செலுத்துவதால், கிராமங்களுக்கு பயணம் செய்து விவசாயிகளை சந்தித்தல், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களிலிருந்து பாடம் கற்க தவறிய உயரதிகாரிகள்...

கடந்த 2016-17 நிதி ஆண்டில், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்க குறுவை சாகுபடிக்கு ரூ.56 கோடியும், சம்பா சாகுபடிக்கு ரூ.80 கோடிக்கு கூடுதலாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உழவு, நடவு, இடுபொருள், நீர் கடத்தும் குழாய் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மானியம் மூலம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால், மானியத்தை நம்பி களம் இறங்கிய விவசாயிகளுக்கு வறட்சியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

உள்ளூர் விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்களின் கருத்தை கேட்காமல், மானியம் வழங்கினால் எதையும் சாதிக்கலாம் என திட்டமிட்ட உயரதிகாரிகளால், டெல்டா பகுதியின் வேளாண்மை கேள்விக்குறியானது. அதிலிருந்தும் பாடம் கற்க தவறிய உயரதிகாரிகள், தற்போது கரும்பு சாகுபடிக்கு 30ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து களம் இறங்கியுள்ளனர். இலக்கை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் வேளாண்மை மற்றும் சர்க்கரை ஆலை அலுவலர்களுக்கு இருந்தாலும், இறுதி பாதிப்பை சந்திப்பது விவசாயிகள் தான் என்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள்.

உணவு தானிய உற்பத்தி பாதிப்பை தடுக்க வழிகாட்டப்படுமா....

கடந்த 2015-16ஆம் ஆண்டில் 1.26 கோடி மெட்ரிக் டன் உணவு தானியங்களை (நெல், மக்காச் சோளம், கம்பு, சோளம், ராகி மற்றும் பயறு வகைகள்) உற்பத்தி செய்த தமிழகம், அதன் மூலம் மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதினை பெற்றது. அந்த சாதனையை தொடர்ந்து தக்க வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வேளாண்மைத் துறையில் மொத்தமுள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தினசரி மற்றும் வாராந்திர கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாலும், இணையதளம், கட்செவி அஞ்சல் மற்றும் தபால் மூலமாக சென்னையிலிருந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை இருப்பதாலும், வேளாண் அலுவலர்கள் தங்களின் இயல்பான பணியிலிருந்து விலகிச் செல்கின்றனர். இதனால் வேளாண்மை அலுவலர்களை எளிதில் சந்திக்க முடியாமலும், அவர்களின் ஆலோசனைகளை பெற முடியாமலும் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Newsletter