சிறுதானியங்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சிறுதானியங்களில் ஒன்றான கம்பு பயிரை திருவள்ளூரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தற்போது விவசாயிகள் ஆர்வமாக பயிரிட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பயிர்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பாஸ்ட் புட், மேலை நாட்டு உணவு வகைகள் என உணவு பழக்கவழக்கம் படிப்படியாக மாறியதால், சிறுதானியங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், தற்போது 30 வயதை நெருங்கினாலே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, குழந்தையின்மை என பல்வேறு பிரச்னைகள், உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை அறிந்த பிறகு, மீண்டும் அதனை அன்றாட உணவில் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மீண்டும் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் தர முன்வந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கம்பு பயிரிடப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமஞ்சேரி, பட்டரைபெரும்புதூர், பாண்டூர் பகுதிகளில், கம்பு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இதனை விதை நட்ட 75-ஆவது நாளிலிருந்து அறுவடை செய்யலாம். குறுகிய கால பயிரான கம்பு, மேற்கண்ட பகுதிகளில் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சிறுதானிய பயிர்களை நடவு செய்வதற்கு அதற்கான விதைகள் மற்றும் உரங்களை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter