வேளாண் ஆராய்ச்சிக்கு உலக வங்கி ரூ.1,100 கோடி ஒதுக்கீடு: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர்

இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிகளுக்காக உலகவங்கி நடப்பாண்டில் ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அவை 10 வேளாண் கல்லூரிகளுக்கும், 10 கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கும் வழங்கப்படும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் ஜெனரல் நரேந்திர சிங் ரத்தோர் கூறினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக ஆளுநர் (பொறுப்பு) சிஎச். வித்யாசாகர் ராவ் தலைமை வகித்தார்.

நரேந்திர சிங் ரத்தோர் ஆற்றிய பட்டமளிப்பு விழா உரை: இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 14.6 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில்தான் பால் உற்பத்தி நடைபெறுகிறது. விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் ஆகியோரால்தான் இது சாத்தியமானது.

கால்நடைத் தீவனத்துக்குத் தட்டுப்பாடு: நமக்கு தேவை அதிகம். 2020-ஆம் ஆண்டில் பால் உற்பத்திக்கான தேவை 21 கோடி டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 29.9 கோடி கால்நடைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கான தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பசுந்தீவனத்தைப் பொருத்தவரை 24 சதவீதமும், உலர் தீவனத்தைப் பொருத்தவரை 50 சதவீதமும் தட்டுப்பாடு நிலவுகிறது. பருவநிலை மாற்றத்தால் வேளாண்மையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டு உற்பத்தி மற்றும் தீவனத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

உலக வங்கி இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிக்காக நிகழாண்டுக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி 10 வேளாண்மைக் கல்லூரிகள், 10 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 10 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கவுன்சிலின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றார். விழாவில் கால்நடை மருத்துவம், உணவு பதப்படுத்துதல், கோழியின உற்பத்தி, பால்வளம் ஆகிய தொழில்நுட்பப் படிப்புகளை நிறைவு செய்த 289 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 86 பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

21 பதக்கங்களைக் குவித்த நெசவாளரின் மகன் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கிய கே.ராஜமாணிக்கம் என்ற மாணவர் 7 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப்பதக்கம் என மொத்தம் 21 பதக்கங்களையும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த போர்வை நெசவாளர் பி.கந்தசாமியின் இளைய மகனான ராஜமாணிக்கம், அரசு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எம்.பி.பி.எஸ். இடத்தை விட்டு, விலங்குகள் மீதுள்ள பிரியத்தால் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார்.

தற்போது வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 21 பதக்கங்களைப் பெற்றது அதிக மகிழ்ச்சியளிக்கிறது. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட்டு, அதனால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஆராய்ச்சிகளின் மூலம் அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் என்றார்.

இவர் பொறியாளரான தனது மூத்த சகோதரனை சாலை விபத்திலும், தனது தாயை புற்றுநோயினாலும் அண்மையில் இழந்துள்ளார்.

ராஜமாணிக்கத்தின் தந்தை பேசுகையில், எனது மனைவி ராஜமாணிக்கத்தை பெரிய ஆளாக்கிப் பார்க்க வேண்டும் என்ற மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், மகன் பதக்கங்களைப் பார்க்கும் தருணம் அவருக்கு வாய்க்கவில்லை என்று தழுதழுத்தார்.

Newsletter