பார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு!

தாராபுரம்: பார்த்தீனிய செடிகளை ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு மூலம் அகற்றுவது குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தாராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் கூறியதாவது:
பயிர் சாகுபடி இல்லாத சூழ்நிலையில் வயல்களில் பார்த்தீனியம் செடிகள் அதிகமாக காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

பார்த்தீனிய செடிகளின் இயல்புகள்.

ஒரு செடி 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விதைகள் உற்பத்தி செய்து வேகமாகப் பரவும் தன்மையுடையது. விதைகளுக்கு உறக்க காலம் கிடையாது. விழுந்தவுடன் முளைக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் அனைத்து இடங்களுக்கும் எளிதாகப் பரவும். இந்தச் செடி அதிக வறட்சி, மழையைத் தாங்கி அனைத்து மண்களிலும் வளரும்.

பாதிப்புகள்: கால்நடைகள், மனிதர்களின் உடல்களில் இந்தச் செடி படும்போது சர்ம நோய்கள் ஏற்படும். இதனை உண்டால் கால்நடைகளுக்குப் பாதிப்பும், மனிதர்களுக்கு இப்பூக்களின் மகரந்தம் சுவாசக் கோளாறையும் ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: வளர்ந்த செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கையுறைகளைப் பயன்படுத்தி பிடுங்கி அழுத்திட வேண்டும். சாகுபடி நிலங்களில் செண்டுசாமந்தி(மேரிகோல்டு) பயிரிட்டு கட்டுப்படுத்தலாம். தரிசுநிலம், சாலையோரங்களில் இதைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சாதாரண உப்பைக் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

சாகுபடி நிலங்களில் பயிருக்கு ஏற்ப அட்ரசின், கிளைபோசேட், மெட்ரிபூசன் போன்ற களைக் கொள்ளிகளை வேளாண் துறை அறிவுரையின்படி பயன்படுத்தலாம்.

சைகோகிராமா மைகாலரேட் எனும் உயிரியல் காரணி பார்த்தீனியத்தின் இலைகளைச் சாப்பிடுவதன் மூலம் இதன் பரவலைக் கட்டுப்படுத்துகிறது.

பார்த்தீனியத்தைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் முறை: பூ பூக்கும் முன் பார்த்தீனிய செடிகளைச் சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ. நீளவாட்டில் சிறியதாக நறுக்கி 1 மீ. சுற்றளவில் 10 செ.மீ. உயரத்துக்கு கீழே இருந்து அவற்றை அடுக்க வேண்டும்.

இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டுச் சாணத்தை கரைச்சலாக கொண்டு சமமாகத் தெளிக்க வேண்டும்.

இவற்றை 10 நாள்கள் மக்குவதற்காக வைக்கவேண்டும். 5 நாள்கள் கழித்து 250 முதல் 300 மண்புழுக்களை இந்த மக்கிய உரத்தில் விடவேண்டும் என்றார்.

Newsletter