நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு

சேலம்: நிலக் கடலைப் பயிரில் சிவப்பு கம்பளிப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்துறை தெரிவித்துள்ளது.

சிவப்பு கம்பளிப் பூச்சியின் புழுக்கள் நிலக்கடலை பயிரைக் குறிப்பாக மானாவாரிப் பயிரைத் தாக்கி அதிக சேதம் விளைவிக்கக் கூடியவை. இது ஒரு சில பருவங்களில் மாத்திரம் மிக அதிக அளவில் தோன்றக் கூடிய 'எபிடமிக் ' வகைப்பூச்சி. காலநிலையைப் பொருத்து பூச்சிகள் ஒரே சமயத்தில் ஏராளமான எண்ணிக்கையில் தோன்றும். தமிழகத்தில் கோவை, கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஜூன் - ஜூலை மாதங்களிலும், மதுரை, ராமநாபுரம் மாவட்டங்களில் ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களிலும் திடீரென்று பெருவாரியாக தோன்றும்.

இவை ஆயிரக்கணக்கில் அலை அலையாக அடுத்துள்ள வயல்களுக்கு செல்லும். புழுக்கள் கடித்து சேதப்படுத்திய பயிர், கால்நடைகள் மேய்ந்ததை போன்று தோன்றத்தை அளிக்கும். தாக்கப்பட்ட பயிரிலிருந்து பெரும்பாலும் மகசூல் பாதிக்கும். இது நிலக்கடலை தவிர கொண்டைக்கடலை, துவரை, சோளம், கம்பு, பருத்தி , கேழ்வரகு மற்றும் ஆமணக்கு பயிர்களையும் தாக்கக்கூடியது.

பூச்சிகளின் வாழ்க்கை சரிதம்: நல்ல கோடை மழைக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பின்னர் மாலை வேளைகளில் மண்ணுக்கு அடியிலுள்ள மண் கூடுகளிலிருந்து அந்து பூச்சிகள் வெளிவரும். வெளிவந்த உடனேயே அவை இனச்சேர்க்கை செய்து முட்டைகள் இட ஆரம்பிக்கும். ஒரு பெண் அந்து பூச்சி 2 - 6 நாள்களில் 600 முதல் 700 முட்டைகளை குவியல்களாக நிலக்கடலை இலைகளின் அடிப்பரப்பில் இடும்.

சில வேளைகளில் வேறு பயிர்களின் இலைகள், மண்கட்டிகள், காய்ந்துபோன குச்சிகள் போன்றவற்றிலும் முட்டையிடக்கூடும். முட்டைகள் மஞ்சள் நிறமாகவும், பளபளப்பாகவும் தென்படும். முட்டைகளிலிருந்து 2 - 3 நாள்களில் இளம்புழுக்கள் வெளிவரும். அவை கூட்டம் கூட்டமாக இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு, ஒரிரு நாள்கள் வரையில் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். அவை சாம்பல் நிறமாகவும், ரோமம் கலந்தும் தென்படும்.

சுமார் 40 முதல் 50 நாள்களில் அவை முழு வளர்ச்சி அடையும். வளர்ந்த புழுக்களைவிட இளம் புழுக்கள் அதிக சுறு சுறுப்புடன் இயங்குவதோடு அதிக சேதத்தையும் விளைவிக்கக் கூடியவை.

நன்கு வளர்ந்த புழுக்கள் 5.0 செ.மீ நீளத்திலும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், உடல் முழுவதும் சிகப்பு கலந்த பழுப்பு நிற ரோமங்களைக் கொண்டு காணப்படும். ஓரளவு மழைபெய்து, மண் நனைந்து மிருதுவானவுடன் வளர்ந்த புழுக்கள் மண்ணைக் குடைந்து சென்று 10 முதல் 20 செ.மீ. ஆழத்தில் மண் கூட்டினுள் கூண்டு புழுவாக மாறும் அந்த சமயத்தில் மழை இல்லாவிட்டால் பெரும்பாலான புழுக்கள் மண்ணுக்குள் செல்ல முடியாதபடி மடிந்துவிடும்.

கூண்டுப்புழு பருவம் 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். அடுத்த வருடம் மறுபடியும் கோடைமழைக்குப் பின்னர் அவை அந்துப் பூச்சிகளாக வெளிவரும் . அந்துப் பூச்சிகள் நடுத்தர அளவுடன் வெண்மை நிறத்திலும் முன் இறக்கைகளின் மேல் விளிம்பை ஒட்டி மஞ்சள் நிறக்க கோடுடனும் பழுப்பு நிற கீற்றுக்களுடனும் பின் இறக்கைகள் வெண்மை நிறத்தில் கருப்புநிற கோடுடனும் பழுப்பு நிற கீற்றுகளுடனும் பின் இறக்கைகள் வெண்மை நிறத்தில் கருப்பு நிறப்புள்ளிகளுடனும் தென்படும். தலையிலும் ஒரு மஞ்சள் நிறப்பட்டை காணப்படும்.

தாக்குதல் அறிகுறிகள்: இளம்புழுக்கள் பச்சையத்தை சுரண்டி தின்கின்றன. வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சாப்பிட்டு சேதம் விளைவிக்கிறது. செடிகளின் அடித்தண்டு, காம்புகள் , நடு நரம்புகள் தவிர மற்ற எல்லா இலைபாகங்களையும் கடித்து உண்டு விடும். இவைகள் சேதமுறுவதால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு காய்ப்பிடிப்பு குறைந்துவிடும். சில சமயங்களில் பயிரில் எந்த மகசூலும் கிடைக்காது. 100 மீட்டருக்கு 8 முட்டை குவியல்கள் தென்படுதல் பொருளாதார சேதநிலை ஆகும்.

தடுப்புமுறை: கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழித்தல். முட்டை குவியல்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். விளக்குப் பொறி மற்றும் சொக்கப்பனை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

நிலக்கடலைப் பயிரில் சோயா மொச்சை அல்லது துவரை அல்லது தட்டைப்பயறு ஊடு பயிராக பயிரிடலாம். இவற்றில் இடும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழிக்கலாம். வெயில் நேரங்களில் புழுக்கள் கூட்டம் கூட்டமாக துவரை பயிரின் மேல் வந்து இருக்கும் அவற்றை எளிதில் சேகரித்து அழிக்கலாம்.

உயிரியல் முறைகள்: நியூக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் நச்சுயிரி (என்.பி.வி.) இளநிலை புழுக்களை நன்கு கட்டுப்படுத்தக் கூடியவை. இதற்கு ஒரு ஏக்கருக்கு 100 புழு சமன். அதாவது நச்சுயிரிகள் தாக்கி மடிந்து போன 100 புழுக்களிலிருந்து கிடைக்கக் கூடிய நச்சுயிரி துகிள்களை போதுமான நீருடன் கலந்து பயிரின்மேல் நன்கு தெளிக்க வேண்டும். ஒரு புழு சமன் என்பது 6 109 நச்சுயிரி துகிள்களுக்கு சமமானது.

விஷத் தெளிப்பு:
1. ரோமம் முளைக்காத இளநிலைப் புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு பாசலோன் 4 சத தூள் அல்லது குயினல்பாஸ் 1.5 சத தூள் அல்லது கார்பரில் 10 சத தூள் 10 கிலோவினை 1 ஏக்கருக்கு தூவ வேண்டும்.
2. சற்று வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 250 மி.லி அல்லது குயினால்பாஸ் 30 இசி 300 மி.லி அல்லது குளோரிபைரிபாஸ் 20 இசி 500 மி.லி அல்லது பாசலோன் 45 இசி 300 மி.லியை 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
3.வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் ஏக்கருக்கு 300 மி.லி யினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இப்பூச்சி ஒரே சமயத்தில் அதிக பரப்பளவில் தோன்றக்கூடியது. ஆதலால் எல்லா விவசாயிகளும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒருங்கினைந்த கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.செல்லதுரை தெரிவித்
துள்ளார்.

Newsletter