லாபம் தரும்: சாமந்திப்பூ சாகுபடி

அரக்கோணம்: புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்களில் சாமந்தி பூவுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும். எனவே சாமந்திப் பூவை தற்போது சாகுபடி செய்தால் அந்த கால கட்டத்தில் அவை அறுவடைக்கு தயாராகி விடும்.

சாமந்திப் பூ ரகங்களை பொருத்தவரை கோ-1, கோ-2 மற்றும் எம்.டி.யு- 1ஆகியன. கோ -1 மஞ்சள் நிறப் பூக்களைக் கொடுக்கும். கோ -2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களைக் கொடுக்கும். எம்.டி.யு.- 2 மஞ்சள் நிறப் பூக்களைக் கொடுக்கும். பெரும்பாலும் பூக்கள் சாகுபடிக்கு வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல.

மண்ணின் கார அமிலத் தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை. சாமந்தி ஒரு வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். இச் செடிகள் நீண்ட இரவு மற்றும் குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும்.

இதற்கான சாகுபடி நிலம் தயாரித்தலின்போது நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு, கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். நிலத்தை நன்கு சமன்படுத்திய பிறகு சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். நடவுப் பருவத்தின்போது கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.

சேர் பிடித்த இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளி இருக்குமாறு நடவேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறும், வேர்ப்பாகம் முழுவதும் மறையும்படி நடுதல்வேண்டும்.

பருவம் தவறி நடும்போது செடிகளின் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். நடும் முன் வேர்பிடித்த தளிர்களை, எமிசான் கரைசலில் (ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவை) முக்கி நடவேண்டும். ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 1,11,000 சாமந்தி செடிகள் தேவைப்படும்.

உர மேலாண்மை: அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின்போது இடவேண்டும். பின்னர் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, இலேசாகக் கிளறி மண்ணினுள் மூட வேண்டும்.

மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரத்தை நட்ட 30 நாள்கள் கழித்து இடவேண்டும். மறுதாம்புப் பயிருக்கும் இதே அளவு உரம் இடவேண்டும். பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60-ஆவது நாள்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர், நட்ட மூன்று நாள்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்படும்பொழுது களை எடுக்கவேண்டும்.

செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும். சாமந்தியில் மறுதாம்புப் பயிர் என்பதும் முக்கியம். நவம்பர் மாதத்தில் நடவுப் பயிர் பூத்து ஓய்ந்துவிடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, நடவுப் பயிருக்குப் பரிந்துரை செய்த அதே அளவு உரத்தினை இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.

இலைப்பேன், அசுவினி இலைப்புழு: இவைகள் இலைகளில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாமந்தி பூச்செடிகளை தாக்கும் நோய்களாக வேளாண் விஞ்ஞானிகள் குறிக்கும் நோய்கள் பல உள்ளன.

வேர் வாடல் நோய்: செடிகள் திடீரென வாடி காய்ந்து விடும். தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி காணப்படும். கட்டுப்படுத்த காப்பர் அக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும்.

இலைப்புள்ளி நோய்: தாக்கப்பட்ட இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, இலைகள் வெளுத்துவிடும். இதனால் செடிகளின் வளர்ச்சிக் குன்றி மகசூல் இழப்பு ஏற்படும். கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.

சாமந்தி பூவுக்கு வயது எனும் போது நடவுப் பயிருக்கு 6-8 மாதங்கள், மறுதாம்புப் பயிருக்கு 4 மாதங்கள்.

நட்ட 3 மாதங்களில் சாமந்தி அறுவடைக்கு வரும், பூக்களை சூரிய வெப்பத்துக்கு முன்னர் காலைவேளைகளில் பறிக்க வேண்டும். ஹெக்டேருக்கு நடவுப் பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும். மறுதாம்புப் பயிரில் 10 டன்கள் கிடைக்கும்.

Newsletter