திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள்

திருவள்ளூர்: தமிழக அரசின் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளின் கீழ், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முத்துதுரை கூறியதாவது:
அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள், அரசிடமிருந்து தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என குறை கூறுகின்றனர். விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும்.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்: இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேருக்கு மிகாமல் காய்கறி விதைகள் 40 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (உயர் தொழில்நுட்ப உற்பத்தி பெருக்குத் திட்டம்): முக்கனி (மா, பலா, வாழை) பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் பழப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு மானியத்தில் செடிகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.

மா (ஒரு ஹெக்டேர்) ரூ.7,650 மதிப்பிலும், கொய்யா ரூ.9,900 மதிப்பிலும், பப்பாளி ரூ.22,500 மதிப்பிலும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.

காய்கறி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. மிளகாய் சாகுபடிக்காக அதற்கான விதைகள், இடுபொருள்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படுகிறது.

மலர் சாகுபடியை அதிகரிக்க, மல்லிகை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.16,000 மானியத்தில் செடிகள் வழங்கப்படுகின்றன.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு நிழல் வலைக்குடில் அமைப்பதற்கு ரூ.355- (ஒரு சதுர மீட்டருக்கு) மற்றும் பசுமைக்குடில் அமைப்பதற்கு ரூ. 467.50 (ஒரு சதுர மீட்டருக்கு) மானியம் வழங்கப்படுகிறது.

காய்கறித் தளைகள் வழங்கும் திட்டம்: வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக மானியத்தில் தளைகள் வழங்கப்படுகிறது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்: தொகுப்பு முறையில் ஒரு குழுவுக்கு 50 விவசாயிகள் வீதம் தேர்வு செய்து, இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு பயிற்சி மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.

பிரதம மந்திரியின் விவசாயத்துக்கான நீர்பாசனத் திட்டம்: தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

இதுபோன்று ஏராளமான திட்டங்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களைப் பெற திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் உள்ள அலுவலகத்தையும், கீழ்க்காணும் அந்தந்த பகுதிக்கான தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆர். கே.பேட்டை 8870739991
பள்ளிப்பட்டு 9442943312
திருத்தணி 9790171116
திருவாலங்காடு 9566272112
ஈக்காடு 9843643170
எல்லாபுரம் 8825748432
சோழவரம் 9600009853
கடம்பத்தூர் 9444227095
பூந்தமல்லி 9787504272
அம்பத்தூர் 9176691999
பூண்டி 9843643170
புழல் 9566272112
கும்மிடிப்பூண்டி 9787504272
மீஞ்சூர் 9600009853

Newsletter