விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம் பல்லடத்தில் அமையுமா?

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் விதைப் பரிசோதனை நிலையத்தையும் விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் விதைச் சான்றளிப்புத் துறையின் வழிகாட்டுதலோடு ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் சான்றளிக்கப்பட்ட விதை உற்பத்தி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் திருப்பூர் வருவாய் மாவட்டத்தின் பங்களிப்பு 40,000 டன் ஆகும்.

மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் பங்களிப்பை வழங்கிடும் இந்த மாவட்டத்தில் அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் துறை உரிமம் பெற்ற 46 விதை சுத்தி நிலையங்கள் இயங்கிவருகின்றன. இதில் தாராபுரம், காங்கயம் வட்டாரப் பகுதிகளில் 40 விதை சுத்தி நிலையங்களும், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் வட்டாரங்களில் 6 விதை சுத்தி நிலையங்களும் இயங்கிவருகின்றன.

இதில் தாராபுரம், காங்கயம் வட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் தற்போது அலுவலகப் பணிக்காகவும், விதைக் குறைபாடு மற்றும் சந்தேகங்களுக்கு முறையிட 100 கி.மீ. தொலைவிலுள்ள ஈரோட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, மடத்துக்குளம், உடுமலை வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 70 கி.மீ. தொலைவில் உள்ள கோவைக்குச் செல்கின்றனர்.

எனவே, பயண நேரம் மற்றும் அலுவல் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பல்லடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்துடன் கூடிய விதைப் பரிசோதனை நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விதை சங்க மாநிலச் செயலாளர் சி.காளிதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் விதைச் சான்றளிப்புத் துறை உரிமம் பெற்ற 150 முழு நேர விதை சுத்தி நிலையங்களும், 300 பகுதி நேர விதை சுத்தி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தி ஒரு லட்சம் டன் ஆகும்.

தமிழகத்தில் அரியலூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள 28 மாவட்டங்களுக்கும் விதை சுத்திப் பணிகளைக் கண்காணிக்க ஏதுவாக விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் விதைப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.

இதில் நீலகிரி மாவட்டத்தில் நெல் உள்ளிட்ட பயிர் வகை உற்பத்தி இல்லை. மீதமுள்ள திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் விதைப் பரிசோதனை நிலையத்துடன் கூடிய விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விதை உற்பத்தியாளர்கள், விவசாயிகள் சார்பில் அரசுக்கு 2009}ஆம் ஆண்டே முன்வைக்கப்பட்டது.

இதில் திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி ஒன்றியங்களிலும் திருப்பூர் நகர்ப் பகுதிகளிலும் விதை உற்பத்தி, சுத்திப் பணிகள் நடைபெறுவதில்லை. பெரும் பகுதி வித்து உற்பத்தியை திருப்பூர் வருவாய் மாவட்டத்தின் தெற்குப் பகுதியே அளிக்கிறது. எனவே, தெற்குப் பகுதியின் மையமான பல்லடத்தில் விதைப் பரிசோதனை நிலையத்தையும் விதைச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தையும் அமைக்க வேண்டும்.

இது தொடர்பான முன்மொழிவு, வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலர், வேளாண்மைத் துறை அமைச்சரிடம் கொள்கைரீதியான ஒப்புதல் பெற வேண்டி கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்தின் விதை உற்பத்தியின் பெரும் பகுதியை வழங்கிடும் திருப்பூர் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Newsletter