குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் பழ விளைச்சல் தொடக்கம்

குன்னூர், சிம்ஸ் பூங்காவில் பெர்சிமன் என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டின் தேசிய பழ விளைச்சல் தொடங்கியுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் பிரிட்டன் போன்ற குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், அங்கு வளரக் கூடிய பழ வகைகளை நீலகிரி மாவட்டத்திலும் பயிரிட்டு சாகுபடி செய்தனர். அந்த வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பழப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பிளம்ஸ், பீச், லிச்சி போன்ற பழ மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பழ மரங்கள் அந்தந்தப் பருவத்துக்கேற்ப விளைந்து வருவது வழக்கம்.

தற்போது, பெர்சிமன் பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்தப் பழம் மற்ற பழங்களைப் போல நேரடியாக சாப்பிட முடியாது. மரத்திலிருந்து பறித்து ஒருநாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து கழுவி தோலை உறித்து சாப்பிட வேண்டும். இந்தப் பழ சீசன் தொடங்கும்போது சுற்றுலாப் பயணிகள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

சிம்ஸ் பூங்கா பழப் பண்ணையில் உள்ள பழ மரங்களில் தற்போது கொத்து கொத்தாக பெர்சிமன் பழம் பழுத்து தொங்குகிறது. பெர்சிமன் பழத்தின் தாயகம் ஆஸ்திரேலியா என்றாலும், இந்தப் பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, ஈ, கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இப்பழம் தக்காளியைப் போன்று தோற்றம் உடையதாக இருக்கும். ஆண்டுதோறும் ஜூலை இரண்டாவது வாரத்தில் சீசன் தொடங்கி செப்டம்பர் வரை இப்பழம் காய்க்கும். ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை இது விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter