பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.1454 கோடி விடுவிப்பு

தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இது வரை ரூ. 1,453.58 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இப்போது பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 19-ஆம் தேதி வரையில் ரூ.1,453.58 கோடி இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை மேலும் விடுவிக்கப்பட உள்ளது. பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களால் விடுவிக்கப்படும் தொகை விவசாயிகளுக்கு ரொக்கமாக வழங்கப்படக் கூடாது எனவும், சேமிப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்க துணைப் பதிவாளர் தலைமையில் பறக்கும்படை குழுக்களை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter