ஆகஸ்ட் 16-இல் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதற்காக தமிழகத்தில் செயல்படும் அனைத்து விவசாய அமைப்புகள் ஒன்றுபட்டுச் செயல்பட்டு வருகிறோம்.

அதன் அடிப்படையில், அனைத்து சங்கப் பிரநிதிகளும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் அனைவரிடமும் ஆதரவு கோரினோம். பாஜகவைத் தவிர்த்து பிற தலைவர்கள் அனைவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக உறுதி கொடுத்தனர். முதல் கட்டமாக அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம். விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கரும்பு நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், விளை பொருளுக்கு உரிய விலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடைபெறும்.

Newsletter