வறட்சி: காய்ந்துபோன 1.5 கோடி தென்னை மரங்கள்

கடும் வறட்சி காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 1.5 கோடி தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. நீண்ட காலப்பயிரை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு மரத்துக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏறத்தாழ 4 கோடி தென்னை மரங்கள் உள்ளதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக, விளை நிலங்களில் வாய்க்கால்களில் வளர்ந்திருந்த தென்னை மரங்கள் கூட காய்ந்துவிட்டன.

பெரும்பாலான இடங்களில் தென்னந்தோப்புகள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்க்கால்களில் விடும் அளவுக்கு கிணறுகளில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு கிணறுகள் முற்றிலுமாகக் காய்ந்துவிட்டதால் தென்னை மரங்களும் காய்ந்துவிட்டன. சராசரியாக 40 முதல் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடிய தென்னை மரங்களை வறட்சியால் இழந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி தெரிவித்தது: இந்தியாவில் தேங்காய் உற்பத்தியைப் பொருத்தவரை தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் கேரளம், கர்நாடக மாநிலங்கள் உள்ளன.

தேங்காய் விலை உயரும்: தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்கள் அனைத்திலும் பரவலாக தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தஞ்சாவூரில் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் தேங்காய் அதிகம் உற்பத்தியாகிறது.

தென்னை விவசாயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவை. ஆனால், வறட்சி காரணமாக 1,000 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தற்போது தண்ணீர் இல்லை.

குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் பரவலாக தென்னை மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன. காவிரி கரையோரம் உள்ள நிலங்களிலும் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. உயிருடன் உள்ள மரங்களிலும் காய்ப்பு இல்லை. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகம் இருக்கும். ஆனால், நிகழாண்டு அறுவடை மிகவும் குறைவான அளவுக்கே உள்ளது. எனவே, சமையலுக்குத் தேவையான தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும்.

கோயில் வழிபாட்டுக்கான தேங்காய், இளநீர் கிடைக்காத நிலை ஏற்படும். இப்போது தேங்காய் ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனையாகிறது. நிகழாண்டில் தேங்காய் விலை ரூ. 30 முதல் ரூ. 40 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், வறட்சியில் சிக்கி 50 சதவீத அளவுக்கு தென்னை மரங்கள் பட்டுப்போகக் கூடும். சுமார் 30 சதவீத மரங்களில் காய்ப்பு நின்றுவிடும் அபாயமும் உள்ளது. தென்னை என்பது நெல்லைப் போன்று 120 நாள்களில் நமக்கு பலனை அளிக்காது. குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துதான் அதன் பயன் கிடைக்கும். எனவே, தென்னை மரங்கள் பட்டுப்போகும்போது தமிழகம் தேங்காய் உற்பத் தியில் பின்னடைவை சந்திக்கும்.

வேலை இழப்பு ஏற்படும்: தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் பிழியும் ஆலைகள் 300-அதிகமாக உள்ளன. அந்த ஆலைகள் அனைத்தையும் இன்னும் சில மாதங்களில் மூட வேண்டிய சூழல் ஏற்படும். 10,000-க்கும் மேற்பட்ட தேங்காய் உலர் களங்களையும் மூட வேண்டிவரும் என்பதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும்.

மரத்துக்கு ரூ. 20,000 நிவாரணம்: நெய்வேலி என்எல்சி நிறுவனம் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க இடையூறாக இருந்ததாக தென்னை மரங்களை அப்புறப்படுத்தியது. இதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.10,000 இழப்பீடு வழங்கியது. எனவே, தற்போது வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

இதற்காக கிராம அளவில் வருவாய், வேளாண்மை, விவசாயிகள் அடங்கிய குழுவை அமைத்து காய்ந்துபோன தென்னை மரங்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். இதுபோல் தோப்புகளில் காய்ந்துபோன தென்னை மரங்களை அப்புறப்படுத்தி நிலத்தை சீரமைக்க ஏக்கருக்கு ரூ. 50,000 வழங்க வேண்டும் என்றார் அவர்.

ஆய்வு செய்ய குழு அமைக்கலாம்: காய்ந்துபோன தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
கிராம நிர்வாக அலுவலரின் வருவாய்க் கணக்குகளில் தென்னை மரங்கள் குறித்த கணக்கு இல்லை. இதனால், எந்த அடிப்படையில் அரசிடம் நிவாரணம் கோருவது என வருவாய்த் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனால் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து காய்ந்துபோன தென்னை மரங்களை கணக்கெடுத்து, எண்ணிக்கையில் 75 சதவீத மரங்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என அதிகாரிகள் சிலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அரசு எங்களின் ஆலோசனையைக் கேட்டால், இதைத் தெரிவிப்போம் என்றனர்.

Newsletter