டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் காமராஜ்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:

25 நேரடிக் கொள்முதல் நிலையங்கள்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவற்றுக்கு நிரந்தரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.40 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.

நெல் உலர்த்தும் களம்: அறுவடையாகும் நெல்லை உலர்த்த ஏதுவாக ஏற்கெனவே சொந்தக் கட்டடங்களில் செயல்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களின் காலி இடத்தில் நடப்பாண்டில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் 50 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு:
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிக் நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948 -ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூ.2,450-இலிருந்து ரூ.2,995-ஆக 2014 ஏப்ரல் 1-லிருந்து உயர்த்தி வழங்க உள்ளது. இதன் மூலம் 4,460 பருவ காலப் பணியாளர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.2.72 கோடி கூடுதல் செலவாகும்.

பட்டைக் குறியீடு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொருள்களுக்கு தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்கும் இயந்திரங்கள், ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் அதற்கு உண்டான மென்பொருள் உள்ளிட்ட 1,762 பட்டை குறியீடு இயந்திரங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்பது உள்பட மொத்தம் 14 அறிவிப்புகளை அமைச்சர் காமராஜ் வெளியிட்டார்.

Newsletter