பயிர்க் கடன்களுக்கான வட்டிச் சலுகை நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால பயிர்க்கடன் வழங்குவதையும், கடன் தொகையை முறையாக செலுத்துவோருக்கு 4 சதவீத வட்டியில் கடனுதவி வழங்குவதையும் மத்திய அரசு நிகழ் நிதியாண்டுக்கும் (2017-18) நீட்டித்துள்ளது.

தற்போது, விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனாக, ரூ.3 லட்சம் வரை, 7 சதவீத வட்டியில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கடன் தொகையை முறையாக செலுத்துவோருக்கு 3 சதவீத வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அவர்கள் வட்டியில் 4 சதவீதத்தை செலுத்தினாலே போதுமானது. இந்தச் சலுகையை நிகழ் நிதியாண்டுக்கும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுதவிர, அறுவடை காலத்துக்குப் பிறகு 7 சதவீத வட்டியில் 6 மாதங்களுக்கு கடனுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கடன் தொகையில் முதலாவது ஆண்டுக்கு 2 சதவீத வட்டிச் சலுகை அளிப்பதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுகள் யாவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இந்தச் சலுகைகளை அளிப்பதால், நிகழ் நிதியாண்டில் அரசுக்கு ரூ. 20,339 கோடி செலவாகும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

Newsletter