சாரல் மழையைப் பயன்படுத்தி குமரி மாவட்டத்தில் வேகமெடுக்கும் உழவுப் பணிகள்: அணைகளில் நீர்மட்டம் உயராததால் தண்ணீர் திறப்பு தாமதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், முதல்பருவ நடவான கன்னிப்பூ நடவுப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். குறிப்பிட்ட சில குளத்துப்புரவுப் பகுதிகளில் மட்டுமே உழவு மற்றும் விதைப்புப் பணிகள் நடந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவ மழை விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுத்தாலும் இந்த மழை தீவிரமாகப் பெய்யாமல் சாரல் மழையாகவே பெய்து வருகிறது. எனினும் சாரல் மழையால் நிலத்தில் ஏற்பட்டுள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி பல இடங்களில் உழவுப் பணிகளும், நேரடி விதைப்புகளும் வேகம் பெற்றுள்ளன.

இப்பணிகளை தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டுமானால் தொடர்ந்து அணைகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் அணைகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

கன மழை தேவை: தற்போது பேச்சிப்பாறை உள்ளிட்ட பிரதான அணைகளில் மொத்தமாக 700 மி.க. அடி தண்ணீர் மட்டுமே இருப்பாக உள்ளது. இது அணைகளின் மொத்த கொள்ளவுக்கு 8.39 சதமாகும். தற்போது பெய்து வரும் சாரல் மழையால் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஊற்றுகள் ஏற்படவில்லை. தொடர்ந்து கனமழை பெய்தால் மட்டுமே அணைகளில் குறிப்பாக பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயரும் என்ற நிலை உள்ளது.

நீர்மட்டம்: திங்கள்கிழமை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 10.95 அடியாகவும், பெருஞ்சாணி அணை- 23.95, சிற்றாறு 1 அணை- 2.03, சிற்றாறு 2 அணை- 2.13,  மாம்பழத்துறையாறு அணை- 22.97 அடியாகவும் இருந்தது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்களில் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாசனத்துக்காக அணைகள் திறக்கப்படும். நிகழாண்டு வறட்சியின் காரணமாக அணைகள் வறண்டு கிடக்கின்றன.  தற்போது பெய்து வரும் பருவ மழையும் சாரல் மழையாகவே பெய்கிறது.

பொதுவாக அணைகள் திறக்கப்படும் போது, அனைத்து அணைகளிலும் ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 1500 மி.க. அடி தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும். அப்போது தான் நம்பிக்கையாக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போது சுமார் 700 மி.க. அடி தண்ணீர் மட்டுமே அணைகளில் உள்ளது.

பருவ மழை கனமழையாகப் பெய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இம்மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு அணைகள் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

Newsletter