2.96 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 403 கோடி இழப்பீடு

தமிழகத்தில் 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.403 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2015-2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10.14 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர். அதற்காக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் 50 சதவீத பங்குத் தொகையாக, ரூ.51.46 கோடியை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்குத் தமிழக அரசு வழங்கியது.

2015-2016-ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் பாதிப்படைந்தது. அதில் பயிர்க் காப்பீடு செய்து, மகசூல் குறைவால் பாதிக்கப்பட்ட, 2.96 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 403.79 கோடி கணக்கிடப்பட்டது. இதில், மாநில அரசின் பங்காக ரூ.168.66 கோடியை இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்திற்குத் தமிழக அரசு விடுவித்தது.

இதைத் தொடர்ந்து, 22 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 96 ஆயிரத்து 550 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.403.79 கோடியை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எந்தெந்த மாவட்டங்கள்?: நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.205.5 கோடி, திருவாரூர் விவசாயிகளுக்கு ரூ.101.70 கோடி, கடலூர் விவசாயிகளுக்கு ரூ.45.15 கோடி, திருவள்ளூர் விவசாயிகளுக்கு ரூ.25.38 கோடி, சிவகங்கை விவசாயிகளுக்கு ரூ.8.1 கோடி, காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு ரூ.5.26 கோடி, ராமநாதபுரம் விவசாயிகளுக்கு ரூ.3.72 கோடி, விருதுநகர் விவசாயிகளுக்கு ரூ.2.54 கோடி, திருவண்ணாமலை விவசாயிகளுக்கு ரூ.2.5 கோடி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1.42 கோடியும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Newsletter