டெல்டா மாவட்டங்களில் வறட்சியும்-புலம்பெயர்வும்

டெல்டா மாவட்டங்களில் வறட்சியும்-புலம்பெயர்வும் ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் மிகக் கடுமையான வறட்சியால் புலம்பெயர்வும் தொடர்கிறது.

தமிழகத்தில் வறட்சி என்பது புதிதல்ல. பல நூறு ஆண்டுகளில் அவ்வப்போது நிலவிய வறட்சி குறித்த சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. கி.பி. 1570-இல் திருநெல்வேலிக் கடற்கரைப் பிரதேசத்தில் நிலவிய வறட்சி பற்றிய தகவல்களை போர்ச்சுகீசிய மிஷன் பதிவேடு கூறுகிறது. இதேபோல, கி.பி. 1648-ல் கோவையிலும், 1659-ல் தமிழகத்திலும் வறட்சி நிலவியது.

17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி கடுமையானது. இதை அந்தந்த மாவட்ட அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாது வருஷத்து பஞ்சம்:

இப்போது, வரலாறு காணாத வறட்சி எனக் கூறப்படுகிறது. இதேபோன்ற வறட்சி 1876-ல் தொடங்கி, தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு நீடித்தது. இது, தமிழ் ஆண்டு தாது ஆண்டில் ஏற்பட்டது. எனவே, இதை தாது வருஷத்து பஞ்சம் என அழைக்கின்றனர். இந்த வறட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் முழுவதும் நிலவியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பசியாலும், பட்டினியாலும் இறந்தனர். விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், மக்களின் பொருளாதாரம் வியக்கத்தக்க அளவுக்குக் குறைந்தது. மக்களும் வருமானமின்றி வாடி வருந்தினர். இப்போது, சோமாலியா நாட்டில் நிலவிய பஞ்சம் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதனால், மக்கள் வாழ்வதற்கு இடமின்றி எஞ்சிய ஆடு, மாடுகளுடனும், அவசியமான உடைமைகளுடனும் பல இடங்களுக்கும் புலம் பெயர்ந்தனர்.

இந்த நிலைமை அக்காலத்தில் டெல்டா மாவட்டங்களிலும் நிலவியது. அப்போது இருந்த ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்பான சாகுபடி அளவில் 25 சதம்தான் அறுவடையானது. நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்த மக்களும் மேலும் வறுமைக்கு ஆளாகி ஏமாற்றமடைந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், அக்காலத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வறுமையும், பட்டினியும் அதிகரித்ததால் எஞ்சிய கால்நடைகளுடனும், அத்தியாவசியமான உடைமைகளுடனும் ஏராளமானோர் புலம்பெயர்ந்தனர். குறிப்பாக, நாகை, திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் மேற்கு நோக்கி நகர்ந்தனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் தெரிவித்தது:

தாது வருஷத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து பிழைப்புத் தேடி மேற்கு நோக்கிச் சென்றுள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கனாங்குடி, துப்பாக்கித் தொழில்சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் முன்னோர்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்து சென்றிருக்கலாம் என்பது கள ஆய்வில் தெரிய வருகிறது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதை உறுதி செய்ய முடிகிறது. சிலர் மேற்கு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர் என்றார் மாறன்.

அதன் பிறகு, அவ்வப்போது மழை குறைவால் சாகுபடி பாதிக்கப்பட்டு வறட்சி நிலவியது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததாலும், மழையளவு குறைந்துவிட்டதாலும் சாகுபடிப் பணிகள் குறைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்களும், சிறு, குறு விவசாயிகளும் பிழைப்புத் தேடி திருப்பூர், ஈரோடு, கேரள மாநிலத்துக்குச் சென்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 50 சதத்துக்கும் அதிகமானோர் பிழைப்புக்காக நகரங்களை நோக்கியும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றுவிட்டனர் என்கிறார் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் குறுவை மட்டுமல்லாமல் சம்பாவும் பொய்த்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலி வேலை கிடைப்பதில்லை. எனவே, பிழைப்புக்காக மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வது தொடர்கிறது என்றார் அவர்.

இந்த வறட்சி நிலைமை மே, ஜூன் மாதங்களிலும் தொடர்ந்தால் புலம்பெயர்வு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, தண்ணீரைச் சேமிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர்வைத் தடுக்க முடியும்.

வறட்சி தொடர்ந்தால் புலம்பெயர்வு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, தண்ணீரைச் சேமிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர்வைத் தடுக்க முடியும்.

 

Newsletter