வறட்சியால் பதநீர் வரத்து குறைந்தது: உற்பத்தி சரிவால் கருப்புக்கட்டி விலை அதிகரிப்பு

வறட்சியால் பதநீர் உற்பத்தி சரிவு காரணமாக கருப்புக்கட்டி உற்பத்தி வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் கருப்புக்கட்டி விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி செய்தபோதிலும், உடன்குடி கருப்புக்கட்டிக்கு தனி மவுசு உண்டு. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, பரமன்குறிச்சி, வேம்பார் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உற்பத்தி செய்யப்படும் உடன்குடி கருப்புக்கட்டி ரகம் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வழக்கமாக மழைக் காலங்களில் கருப்புக்கட்டி உற்பத்தி பாதிக்கப்படும். வடகிழக்குப் பருவமழை முடிந்ததும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கருப்புக்கட்டி அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

மழைக் காலங்களில் உற்பத்தி குறைந்து விலை அதிகரிப்பதும், மழை காலம் முடிந்து உற்பத்தி அதிகரித்து கருப்புக்கட்டி வரத்து அதிகரித்ததும் விலை குறைந்தும் காணப்படுவதுண்டு. சராசரியாக உடன்குடி கருப்புக்கட்டி கிலோ ரூ. 140 என்ற விகிகத்தில் 10 கிலோ ரூ. 1400-க்கு விற்கப்படும். வரத்து குறையும்போது, ரூ. 2000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை விலை அதிகரிப்பதுண்டு.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் உடன்குடி கருப்புக்கட்டி வரத்து அதிகரிப்பதால் விலையும் குறைந்து 10 கிலோ ரூ. 1400 வரை விற்பனை செய்யப்படும். கடந்த 2016 இல் வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

வறட்சியால் நிகழாண்டு பதநீர் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கருப்புக்கட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் பதநீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

பதநீர் கிடைக்காததால் கருப்புக்கட்டி வெகுவாக உற்பத்தி சரிந்ததால், விலையும் அதிகரித்து வருகிறது. கருப்புக்கட்டி (10 கிலோ) விலை ரூ. 2400-க்கும், வேம்பார் கருப்புக்கட்டி (10 கிலோ) விலை ரூ. 2100-க்கும் விற்கப்பட்டது. இதேநிலை நீடித்தால் கருப்புக்கட்டி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பனைத் தொழிலாளி ஒருவர் கூறியது: வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பதநீர் உற்பத்தி அதிகமாக இருக்கும். சொல்லப்போனால் இது பதநீர் சீசன் காலம்.

வறட்சியால நிகழாண்டு பனைகளில் பதநீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 10 முதல் 15 லிட்டர் கிடைக்க வேண்டிய பனையில் தற்போது 3 முதல் 4 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.

பதநீர் உற்பத்தி குறைந்ததால் கருப்புக்கட்டி உற்பத்தியும் சரிவை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில்தான் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பனைத் தொழில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நிலவும் வறட்சியால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது. உடன்குடி, வேம்பார் கருப்புக்கட்டிக்கு இன்றும் வரவேற்பு இருப்பதால் விளாத்திகுளம், எட்டயபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் பனைத் தொழில் அமோகமாக இருந்து வருகிறது.

ட்சியால் பனை மரங்கள் பட்டுபோய் காணப்படுகின்றன. இதனால் நிகழாண்டு வரலாறு காணாத வகையில் பனைத் தொழில் அழிவை சந்தித்து வருகிறது. இதன் மூலம் கருப்புக்கட்டி உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது என்றார் அவர்.

 

Newsletter