மோகனூரில் சூறைக் காற்று: 600 வாழை மரங்கள் முறிந்து சேதம்

இதனால் விவசாயிகளுக்கு ரூ. 2.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் சீதோஷ்ண நிலை மாறியது. மோகனூர் பகுதியில் மாலை பொழுதில் சூறைக் காற்று வீசியது. இதில், கட்டடங்களின் மேற்கூரைகளில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், ஓடுகள் காற்றில் பறந்தன. மேலும், புளி, வேம்பு, புங்கம் உள்ளிட்ட மரங்களும் காற்றுத் தாக்குப் பிடிக்க முடியாமல் முறிந்தும், வேரோடும் சாய்ந்தும் விழுந்தன. பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மோகனூர் பெரியசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வண்ணாந்துறையில் இரு ஏக்கர் பரப்பளவில் 2,000 வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். ரஸ்தாளி, பச்சநாடன், மொந்தன் போன்ற ரகங்கள் அதில் விளைவிக்கப்பட்டுள்ளன. இவை அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் வீசிய சூறைக் காற்றில் 200 மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின. அதேபோல், சிங்காரம் என்பவரின் தோட்டத்தில் 200 வாழை மரங்களும், பழனிமலை என்பவர் தோட்டத்தில் 150 வாழை மரங்களும், காந்தி தோட்டத்தில் 50 வாழை மரங்களுமாக மொத்தம் 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter