தென்னையில் இருந்து நீரா பானம்: விவசாயிகள் வரவேற்பு

நலிவுற்ற நிலையிலுள்ள தென்னை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க தென்னை மரத்திலிருந்து நீரா பானத்தை இறக்கி விற்பனை  செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீரா என்பது தென்னை மரங்களின் மலராத பாளைகளை அரிவாளால் கீறி, சாறு வடித்து, இயற்கை முறையில் நொதிக்க வைக்காமல் தயாரிக்கப்படும் ஆல்கஹால் கலப்பற்ற இயற்கை பானமாகும். பல்வேறு வைட்டமின்கள் மற்றும் இயற்கை தாது உப்புகள் நிறைந்த ஆரோக்கிய பானமாகும்.

மேலும், நீரா பானத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 11 லட்சம் ஏக்கரில் 8 கோடிக்கும் அதிகமான தென்னை மர சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயன்பெறுவர்.

அகில இந்திய அளவில் தமிழகம் தென்னை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வருகிறது. விவசாயிகளுக்கு 1 தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் சூழலில், நீரா மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை தயாரிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வருமானமும், தேங்காய்க்கு நல்ல விலையும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாநில அமைப்பாளர் ஆர்.சி. பழனிவேலு கூறியது:

தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னையிலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதை வரவேற்கிறோம். இதன் மூலம் சுமார் 2 லட்சம் தென்னை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சார்புடையோர் பயனடைவர். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் தென்னை விவசாயிகளுக்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும். அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் அரசின் திட்டத்தை தென்னை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது என்றார்.

Newsletter