பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

வறண்ட வானிலை காரணமாக  பருத்தியில் ஏற்படும் மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், ஏ.பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஒரு சில இடங்களில்  மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இந்த மாவுப்பூச்சியை சுற்றியுள்ள மெழுகுப்படலம், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது

பரவும் வழிகள்: காற்று, மனிதர்கள், பறவைகள் மூலமாகவும், நீர்பாசனம் செய்யும்போதும், பண்ணைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள், தாக்கப்பட்ட நடவுப் பொருள்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்யும்போது, அதன்மூலம் இவை எளிதாகப் பரவுகின்றன.

எறும்புகளின் நடமாட்டத்தைப் பார்த்து இவற்றின் தாக்குதலை உறுதி செய்யலாம். எறும்புகள் இந்த மாவுப்பூச்சிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர உதவுகின்றன.

அறிகுறிகள்: பஞ்சு போல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிக் கூட்டங்கள் இலைகள், இளம் தண்டுகளில் பரவிக் காணப்படும். இலை மற்றும் தண்டின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சள் நிறமாகி, பின்னர் உதிர்ந்துவிடும். தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சியின்றி குட்டையாக காணப்படும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேனை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும், கேப்னோடியம் என்ற பூஞ்சானம் இலையின் மேற்பரப்பில் படர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை: வயலில் காணப்படும் களைச் செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.

கிரிப்டோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரைவிழுங்கியை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தாவரப் பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 ஈசி 400 மிலி அல்லது பிரபினோபாஸ் 50 ஈசி 500 மிலி அல்லது தயோடிகார்ப் 250 கிராம் என்ற அளவிலும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

Newsletter