பணமில்லா பரிவர்த்தனையில் உர விற்பனை: வேளாண் துறை புதிய திட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனை முறையில் உரங்களை விற்கும் புதிய திட்டத்தை வேளாண் துறை அமல்படுத்தவுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. கனகராஜ் கூறியது: இம்மாவட்டத்தில் நிகழாண்டு ஜூன் முதல் சில்லறை உர விற்பனை நிலையங்களில் ரசாயன உரம் பெறும் விவசாயிகளுக்கு அதற்கான உர மானியத்தை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தவுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு தடையின்றி எளிதில் மானியம் கிடைக்கவும் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் மே மாதம் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சில்லறை உர விற்பனையாளர்களும் தங்களது உரம் விற்பனைக்கான உரிமத்தின் 2 நகல், ஆதார் அட்டையின் 4 நகல்கள், உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 7) ஒப்படைக்க வேண்டும்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் செயலர்களும் உர விற்பனை உரிமத்தின் 2 நகல், ஆதார் அட்டையின் நகல் 4 ஆகியவற்றை அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கெனவே, வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்தோரைத் தவிர மற்றவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 7) உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சில்லறை உர விற்பனையாளர்களும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களும் உரம் விற்பனை செய்ய இயலாது என்றார் அவர்.

Newsletter