வறட்சியால் கருகும் மா மரங்கள்: விவசாயிகள் கவலை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்துப் போனதால் மா மரங்கள் காய்ந்து வருகின்றன.

மழையில்லாத காரணத்தால் மா மரங்கள் கருகிவருவதால் விவசாயிகள், தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி மா மரங்களைக் காப்பாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் முன்பெல்லாம் டேங்கர் தண்ணீர் ரூ.400 முதல் 500 வரை விற்கப்பட்டது. தற்போது கடும் வறட்சியின் காரணமாக டேங்கர் தண்ணீர் ரூ.600 முதல் 700 வரை விற்கப்படுகிறது.

டேங்கர் தண்ணீரும் போதிய அளவு கிடைக்காததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். விவசாயத்தை நம்பி லட்சக் கணக்கில் முதலீடு செய்து வரும் விவசாயிகள் இழப்பீட்டை சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர். இதனால் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு மா விளைச்சல் 60 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் மழையில்லாமல் போனால் மா, தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 33 ஏரிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Newsletter