வேளாண்பல்கலை.,க்கு நுண்ணூட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சிறந்த மையம் மற்றும் விஞ்ஞானிக்கான விருதுகள்


அகில இந்திய ஒருங்கிணைந்த மண் மற்றும் பயிர்களில் நுண்ணூட்டங்கள், இரண்டாம் நிலை மற்றும் மாசு தனிமங்கள் பற்றிய திட்டத்தில் தேசிய அளவில் செயல்படும் 22 மையங்களில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மண்ணியல் துறையின் நுண்ணூட்டங்கள் திட்டம் சிறந்த மையத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக அகில இந்திய ஒருங்கிணைந்த நுண்ணூட்டங்கள் திட்டம், இந்திய மண்ணியல் துறை நிறுவனம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் விருது வழங்கப்பட்டது.



நுண்ணூட்டங்கள் பற்றிய ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், தமிழக மாவட்ட மண் வகைகளில் இரண்டாம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை மறுஆய்வு செய்து வட்டார வாரியாக மண் வள வரைபடம் தயாரித்தல், மண் மற்றும் பயிர்களில் சத்துக்களின் உரப் பரிந்துரைக்கான குறியீட்டு அளவு நிர்ணயிப்பு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதற்காகவும், பல்வேறு பயிர்களில் மகசூல் அதிகரிப்பதற்காகவும், மண் வளத்தை பாதுகாக்கவும், மேற்கொள்ளப்பட்ட உரப்பரிந்துரை ஆராய்ச்சிக்காகவும் சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மண் - பயிர்- கால்நடைகள் தொடர்பில் துத்தநாக சத்து பற்றிய ஆராய்ச்சியும் இந்த விருதிற்கு கூடுதல் மதிப்பு கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மையத்தின் மூலமாக நுண்ணூட்டங்கள் மற்றும் இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடையும் பொருட்டு, விவசாயிகளின் நிலங்களில் பல முன்னிலை செயல் விளக்க திடல்களும் நடத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் தி.சித்தேஸ்வரி, இத்திட்டத்தின் பொறுப்பு விஞ்ஞானியாகவும், உதவிப் பேராசிரியர்கள் தீ.ஜெகதீஸ்வரி மற்றும் ப.மாலதி சக விஞ்ஞானிகளாகவும் இந்த மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

விவசாயிகள் பயன்பெறுவதற்காக இந்த மையத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பல்வேறு வெளியீடுகளாக தமிழில் தொகுத்து வெளியிட்டுள்ளது.

மேலும் 11 வகையான பயிர் நுண்ணூட்டக் கலவைகள் இந்த மையத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதே நிகழ்ச்சியில் நுண்ணூட்டங்கள் பற்றிய ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், மண் மற்றும் பயிர்களில் நுண்ணூட்டங்கள் குறைபாடு மற்றும் மேலாண்மை பற்றிய ஆராய்ச்சிக்காகவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், மண்ணியல் துறையின் பேராசிரியை தி.சித்தேஸ்வரிக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழுடனான எஸ்.என்.ரானடே நினைவு விருதும் வழங்கப்பட்டது.

Newsletter