வறட்சியால் தேங்காய் உற்பத்தி கடும் சரிவு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடும் வறட்சியால் தேங்காய் உற்பத்தி சரிந்துள்ளதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூர், செந்தாரப்பட்டி, தெடாவூர், நாகியம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, கோனேரிப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, மூலப்புதூர், தகரப்புதூர், ஒத்தலாக்காடு, 74கிருஷ்ணாபுரம், கடம்பூர், இராமநாதபுரம், ஜோதிபுரம், நடுவலூர், ஒதியத்தூர், மண்மலை, பாலக்காடு, வேப்படிப்பாலக்காடு, 95பேளூர், பச்சமலை என சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகள் வைத்தும், சிறு விவசாயிகள் வரப்பு ஒரங்களில் தென்னை மரங்களை வளர்த்தும் வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள சுமார் 4 ஆயிரம் தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கெங்கவல்லி வட்டத்தில் கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி பகுதியிலுள்ள தேங்காய் மண்டிகள் மூலம் குஜராத், தில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாரம் ஒரு முறை லாரிகளில் தேங்காய் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த வர்த்தகத்தில் தேங்காய் தரகர்கள், தேங்காய் பறிப்போர், அவைகளை லாரிகளில் ஏற்றி மண்டிகளுக்கு கொண்டு செல்வோர், தேங்காய் உரிப்போர், உரித்தவற்றை மீண்டும் லாரிகளில் ஏற்றுவோர் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 75 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இத்தகைய வர்த்தகம் தற்போது கடும் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: நாங்கள் தென்னை மரங்களுக்கு தண்ணீர் விட்டு, தேங்காய்களை அறுவடை செய்து, விற்க ஆகும் செலவு அதிகமாவதால் கட்டுப்படியாகவில்லை.

தற்போது எங்களுடன், வியாபாரிகள், தொழிலாளர்களும் பெரிய அளவில் வருமான இழப்பைச் சந்திக்கின்றனர். எல்லா தென்னை மரங்களையும் ஆண்டு குத்தகைக்கு தரகர்களிடம் விட்டுவிட்டோம். ஆனால் வறட்சியால் தேங்காய் உற்பத்தி சரிந்ததால், அவர்கள் எங்களுக்கு தரவேண்டிய குத்தகை தொகையை குறைக்கின்றனர். எனவே, தமிழக அரசு தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மரங்களுக்கு ஏற்ப, வறட்சி இழப்பீட்டுத் தொகையை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்றனர்.

Newsletter