விவசாயிகளின் மறு வாழ்வுக்குத் தீர்வு என்ன?

தமிழகத்தில் விவசாயத்துக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் கூறியதாவது:

எஸ்.ரங்கநாதன்: அதிக மழை பெய்தாலும் ஆபத்து-பொய்த்தாலும் ஆபத்து என்ற உத்தரவாதம் இல்லாததாக விவசாயம் உள்ளது. கர்நாடகத்தில் 85 சதவீதம் புன்செய் நிலம்தான்; அதாவது, அதிக லாபம் தரக் கூடிய பருப்பு-பயறு வகைகள் உள்ளிட்ட சிறு தானியங்கள் நன்கு விளையக்கூடிய தன்மை கொண்ட நிலங்கள்தான் கர்நாடகத்தில் உள்ளன.

எனினும் தமிழகப் பாசனத்துக்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காகவே புன்செய் நிலங்களில் பெரும் பகுதியில் தண்ணீரைப் பயன்படுத்தி நெல்லை விளைவித்து வருகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின் அடிப்படையில்...:பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை விவசாயிகளுக்குப் பலன் அளிக்கக்கூடிய வகையில் செயல்படுத்துவது உள்பட ஏராளமான பரிந்துரைகள் கொண்ட விரிவான அறிக்கையை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மத்திய அரசிடம் ஏற்கெனவே அளித்துள்ளார்.
ஆனால் அவரது பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு இதுவரை அக்கறை செலுத்தவே இல்லை.

விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை பயிர்க் கடன் அளிக்கப்படுகிறது; பயிர் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.45,000 வரை செலவாகும்.
எனவே, வறட்சியால் விவசாயி பாதிக்கப்படும் நிலையில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரையின்படி ஏக்கருக்கு இழப்பீடாக அதிகபட்சம் ரூ.40,000 வரை அளிக்கும் நடவடிக்கையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார் எஸ்.ரங்கநாதன்.

பி.ஆர்.பாண்டியன்: கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் தேசிய வங்கிகளில் சேர்ந்துள்ள ரூ.72,000 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணமாக மத்திய அரசு ரூ.25,000 கோடி அளிக்க வேண்டும், தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என கடந்த 20 நாள்களாக தில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள்: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2015-16 நிதியாண்டு வரை தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

பயிர்க் காப்பீட்டு பிரீமியத் தொகையைப் பொருத்தவரை விவசாயிகளின் பங்கு 3 சதவீதம் (ரூ.375 மட்டும்), மீதமுள்ள 97 சதவீதத்தை மத்திய-மாநில அரசுகள் சமமாகப் பிரித்துக் கொண்டு செலுத்தும் வழக்கம் உள்ளது.

ஆனால், தமிழக விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் அண்மையில் முடிந்த 2016-17 நிதியாண்டு தொடக்கத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு குழப்ப நிலை அதிகரித்துள்ளது. ஏனெனில், தமிழகத்தில் பயிர்க் காப்பீட்டைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களில் சில பிற மாநிலங்களின் "கருப்புப் பட்டியலில்' உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

பயிர்க் காப்பீடு எப்போது கிடைக்கும்?: 2015-16-ஆம் நிதி ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு எப்போது கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், 2015-16-ஆம் நிதியாண்டுக்கான தனது பங்கு காப்பீட்டு பிரீமியத் தொகையை தமிழக அரசு மிகவும் தாமதமாகச் செலுத்தியது.

மேலும் வறட்சி பாதிப்புக்குள்ளான விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு அளிக்கும் புள்ளிவிவரமும் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரமும் ஒரே சமமாக இல்லாததால் இழப்பீடு வழங்குவதில் பிரச்னை நீடிக்கிறது.

பயிர்க் காப்பீட்டைச் சரி செய்தாலே...:பாசனத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காத அளவுக்கு காவிரி பிரச்னை நீடிக்கிறது. கர்நாடகத்தின் கருணையைத் தொடர்ந்து எதிர்பார்த்து ஏமாறும் நிலைதான் உள்ளது.

எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுப்பது, விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலையை நிர்ணயிப்பது ஆகியவையே தீர்வாக இருக்கும் என்றார் பி.ஆர்.பாண்டியன்.

Newsletter