கமுதியில் கடும் வறட்சியிலும் பப்பாளி சாகுபடி அமோகம்

கமுதி பகுதியில் கடும் வறட்சியிலும் விவசாயிகள் பப்பாளி பயிரிட்டு அமோக மகசூலை உருவாக்கியுள்ளனர்.

கமுதி அருகே காவடிபட்டி, கிளாமரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன் 20 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பப்பாளி மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து அதிலிருந்து சிறிய அளவிலான குழாய்கள் மூலமாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து குறைந்த அளவு தண்ணீரில் மரக்கன்றுகளை வளர்த்தனர். தற்போது அவை மரங்களாக வளர்ந்து அதிக அளவில் காய்கள் காய்த்து அறுவடையாகி வருகின்றன.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி பெரு நகரங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் தங்கள் பகுதியில் விவசாயம் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய மாநில அரசின் மானிய உதவியுடன் விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து பப்பாளி சாகுபடியை செய்து சாதனை படைத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ராஜகோபால் கூறியது:குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சொட்டு நீர்ப் பாசனம் மூலமாக அதிக மகசூல் தரும் பயிர்களை விளைவிக்க முடியும். தரிசு நிலங்களையும் விளை நிலங்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் விவசாயப் பணியை தொடக்கினேன். தற்போது நல்ல மகசூல் கிடைத்துள்ளது என்றார்.

Newsletter