முருங்கைக்காய் கிலோ ரூ. 5: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

முருங்கைக்காய் கிலோ ரூ. 5: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், அதன் விலை கிலோ ரூ. 5 என்ற அளவில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொத்தப்பாளையம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, தடாகோவில், வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது. வெப்ப மண்டல பயிராக உள்ள இந்த முருங்கை, குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரக்கூடியது.

இப்பகுதியில் விளையும் முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருப்பதால் இவை மும்பை, தில்லி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பெங்களூரு, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, சீசன் காரணமாக இப்பகுதியில் விளைச்சல் அமோகமாக உள்ளதால், அவற்றின் விலை 10 மடங்கு குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் காய்களை பறிக்கும் செலவுக்குக் கூட விலை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு சங்கக் கரூர் மாவட்டத் தலைவர் ஈசநத்தம் செல்வராஜ் கூறியது: கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓரளவு பெய்த மழையால் முருங்கைக்காய் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இதனால், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கைக்காய் மொத்த கொள்முதல் வியாபாரிகளிடம் கொண்டுவரப்படும் முருங்கைக்காய் கிலோ ரூ. 5-க்கு மட்டுமே வாங்குகின்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ. 5-க்கு விற்கப்படுவதால், முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

காய் பறிக்க வரும் நபருக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. முருங்கை விற்பதில் கிடைக்கும் பணத்தில், இவர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட முடியாமல் விவசாயிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடும் வறட்சியால் தோட்டத்து கிணறுகளில் இருந்து மணிக்கணக்கில் பணம் கொடுத்து தண்ணீர் பாய்ச்சியும், காய்களை நோய்களில் இருந்து காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்தும் பலனில்லாமல் போய்விட்டது.

இந்தப் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை கொண்டுவரப்படும் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்தத் தொழிற்சாலை கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் இதுபோன்ற இன்னல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

Newsletter