அம்பை பகுதியில் சூறைக் காற்று:ஆயிரக்கணக்கான வாழைகள் நாசம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, விக்கரமசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் திங்கட்கிழமை இரவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்கம்பங்கள் சாய்ந்ததும், பெரிய மரங்கள் முறிந்ததும் மின்சாரம் தடைபட்டது.

சாத்துப்பத்து, ஊர்க்காடு, கோடரங்குளம், ஏர்மாள்புரம் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்தன.

ஊர்க்காடு பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் சுமார் 15 ஏக்கரில் பயிரிட்டிருந்த 15 ஆயிரத்திற்கும் மேலான வாழைகள் காற்றில் சாய்ந்தன.

இதுகுறித்து ஊர்க்காடு விவசாயி சரவணகிளி கூறியதாவது: சுமார் 2 ஏக்கரில் பயிரிட்டுருந்த வாழைப்பயிர், பருவமழை பொய்த்துப்போன நிலையில் கருகத் தொடங்கியது. எனவே, மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சினோம்.

தற்போது வாழைகள் குலைதள்ளி, 20 நாள்களில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தன. இந்நிலையில், திங்கட்கிழமை அடித்த சூறைக்காற்றில் 2500 வாழை மரங்கள் முறிந்தது அனைத்தும் நாசமாகிவிட்டன. ஒரு வாழைக்கு சுமார் 150 ருபாய் செலவு ஆகியுள்ளது. இதனால் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்கின்றனர்.

Newsletter