விளைநிலங்களுக்கடியில் கிடைக்கும் கனிம வளங்கள் விவசாயிகளுக்கே சொந்தம்

விளைநிலம் உள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கிடைக்கும் அனைத்து வகையான கனிம வளங்களும் விவசாயிகளுக்கே சொந்தமானது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி பேசினார்.

காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமும், மத்திய, மாநில அரசுகளின் காவிரி படுகைகளின் கனிமவளக் கொள்கைகள் குறித்து, திருவாரூர் மாவட்ட சேம்பர் ஆப் அக்ரிகல்சர் என்ற அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை மன்னார்குடியில் சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கே.எஸ்.துரைசாமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு காவிரி பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலர் காவிரி எஸ்.ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி பேசுகையில், விளைநிலங்கள் உள்ள பகுதிகளில் பூமிக்கடியில் கிடைக்கும், அனைத்து வகையாக கனிம வளங்களும், அந்த நிலங்களுக்குச் சொந்தமான விவசாயிகளுக்கு உரிமையுடையதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

அந்த கனிம வளங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாது எந்தப் பணியையும் செய்யக் கூடாது. நிலத்தின் உரிமையாளர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மத்திய,மாநில அரசுகளுடன் நிலத்தின் உரிமையாளர்களையும் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். கனிம வளத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.   

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்கும், வறட்சி, வங்கிக் கடன் சுமையால், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சிறு,குறு விவசாயிகள் என பாகுபாடு பார்க்காமல், வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாசனப் பகுதியை பாதுகாத்திடும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க  வேண்டும். மத்திய,மாநில அரசுகள் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நதிகள், அணைக்கட்டுகளை தேசிய சொத்தாக்க, அதிகாரப் பகிர்வு பட்டியலில் திருத்தம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.சேகரன், தமிழ்நாடு விவசாய மன்ற அமைப்பாளர் ஜெ.வரதராஜன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலர் காவிரி தனபாலன், மன்ற செயலர் அ.ராமலிங்கம், விவசாய மன்ற நிர்வாகிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter