நெல்லை மாவட்டத்தில் விவசாய விளைபொருள்களுக்கான முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்கத் திட்டம்: 6 இடங்களில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருள்களைப் பாதுகாத்து உரிய விலைக்கு விற்பனை செய்ய உதவிடும் வகையில் முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேளாண்மை (வணிகம்) துறை சார்பில், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டந்தோறும் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளை நல்ல விலைக்கு விற்பனை செய்திட ஏதுவாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கவும், முதன்மை பதப்படுத்தும் மையம் ஏற்படுத்தவும் குளிர்பதன தொடர் சங்கிலி மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, அந்தந்தப் பகுதிகளின் விளையும் பயிர்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். மேலும், மொத்த உற்பத்தியையும் ஒரே இடத்தில் கொண்டுவரச் செய்து, அங்கு வியாபாரிகளையும் வரவழைத்து சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்டுகிறது. இதற்காக முதன்மை பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், உழவர் சந்தைகள் மற்றும் வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியாகும் பகுதிகளில் இணை இயக்குநர் (வணிகம்) க. இளங்கோ தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது.

மேலப்பாளையம் உழவர் சந்தை, மகாராஜநகர் உழவர் சந்தை, திருநெல்வேலி நகரம் கண்டியப்பேரி உழவர் சந்தை ஆகியவற்றைப் பார்வையிட்ட இணை இயக்குநர், விளைபொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பெரும்பாலான இடங்களில் குளிர்பதனக் கிடங்கு வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், கடையநல்லூர், பாவூர்சத்திரம், வள்ளியூர் ஆகிய பிரதான சந்தை வாய்ப்புள்ள பகுதிகளையும், சுற்றுப் பகுதிகளில் விளையும் பயிர்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை அலுவலர்கள், உழவர் சந்தை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter