சூறைக்காற்றில் 1.20 லட்சம் வாழைகள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சேரன்மகாதேவி பகுதியில் சூறைக்காற்றில் சேதமடைந்த 1.20 லட்சம் வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேரன்மகாதேவி, பத்தமடை பகுதியில் சில தினங்களுக்கு முன் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் பத்தமடை, உடையம்பாளையம், திருத்து, கேசவசமுத்திரம், கரிசூழ்ந்தமங்கலம், கொளுமடை ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்திருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிட்டிருந்த, இன்னும் 45 தினங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 1.20 லட்சம் வாழைகள் சேதமடைந்தன.

இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்டச் செயலர் வேலுமயில், மாவட்டத் தலைவர் முத்துபாண்டியன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். இது குறித்து ரவீந்திரன் கூறியது: சேரன்மகாதேவி வட்டாரத்தில் கடந்த 6 ஆம் தேதி சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 1.20 லட்சம் வாழைகள் சாய்ந்துவிட்டன. இதனால், 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தியை எதிர்நோக்கி காத்திருந்த சமயத்தில் வாழைப் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஆகவே, சேதமடைந்த வாழைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வாழைகள் சேதம் குறித்து சேரன்மகாதேவியில் சார் ஆட்சியரை வியாழக்கிழமை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர் என்றார் அவர்.

Newsletter