பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடர்பாக ஊரக நிதி நிறுவனங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் ஓர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள காரீஃப் பருவம் முதல் இந்தப் புதிய விதிமுறை அமலாகிறது.

எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், வங்கிகளுக்கு வருகை தரும் விவசாயிகளை ஆதார் திட்டத்தில் இணையுமாறு வங்கி அதிகாரிகளும் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், ஆதார் திட்டத்தில் இன்னமும் இணையாத விவசாயிகளுக்கு ஆதார் எண் கிடைப்பதற்கான வசதிகளை மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter