எண்ணெய் பனை சாகுபடித் திட்டம்: மானியம் இருந்தும் விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை

வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணெய் பனைத் திட்டத்துக்கு அதிக அளவில் மானியம் ஒதுக்கீடு செய்தும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

பருவ மழை இல்லாதது, வருமானம் இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடி பரப்பு, கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது. இதனால், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் எண்ணெய் அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் ஏற்படும் அன்னியச் செலவாணி இழப்பை தடுக்கும் வகையில், உள்ளூரில் எண்ணெய் பனைத் திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன், 3 ஆண்டுகளுக்கான மானிய உதவித் தொகையும் வழங்கி வருகிறது.   திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள் 16 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பயிர்களை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கு, எண்ணெய் பனைத் திட்டம் கூடுதல் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாதாதால், கடந்த 3 ஆண்டுகளாக 150 ஏக்கர் பரப்பளவை கூட எட்டவில்லை.  

இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மு. தங்கசாமி கூறியதாவது: ஒரு ஏக்கரில் 56 எண்ணெய் பனை கன்றுகளை நடவு செய்யலாம். தென்னையைப் போல், எண்ணெய் பனைகளுக்கும் நீராதாரம் இருக்கவேண்டும். இந்த பனைகள் 2 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். தென்னை மரத்தில் 30 நாள்களுக்கு ஒரு முறை உருவாகும் பாளை, எண்ணெய் பனையில் 15 நாள்களுக்கு ஒரு முறை உருவாகும். குழி எடுப்பதற்கும், கன்று நடவு செய்வதற்கும் முதலாண்டில் ஹெக்டேருக்கு ரூ. 8 ஆயிரமும், 2 மற்றும் 3 ஆம் ஆண்டுகளில் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

30 அடிக்கு ஒரு கன்று நடலாம். இதனால் இடைப்பட்ட பகுதியில் உளுந்து, தட்டைப் பயறு, சூரியகாந்தி உள்ளிட்ட ஊடு பயிர்களையும் சாகுபடி செய்யமுடியும். அதற்கு, ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தண்ணீர் சிக்கனம் கருதி, சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 135 ஏக்கரில் எண்ணெய் பனை சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Newsletter