பயறுவகைப் பயிர்களில் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க சிறப்புத் தொகுப்புத் திட்டம்

அண்ணாகிராமம் வட்டாரத்தில் பயறுவகை சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு, சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வேளாண் உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயறுவகை சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ. 2,000 மானியம் வீதம் உளுந்து விதை, திரவ உயிர் உரம், டி.விரிடி, நுண்ணுரம், டி.ஏ.பி முதலான இடுபொருள்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விதத்தில் தெளிப்பு நீர் பாசனம் - மழை தூவுவான் கருவிகளுக்கு முறையே ரூ. 19,600 மற்றும் ரூ. 31,600 மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உரிய சான்றுகளை வட்டாட்சியரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி குறைந்த வயதுடைய பயறு வகை பயிர்களைச் சாகுபடி செய்து, மகசூல் ஈட்ட ஆர்வமுள்ள விவசாயிகள், அண்ணாகிராமம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும்படியும், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைத் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரிடம் அளித்து இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter