வணிகம் செழிப்பதற்கு விவசாயமே அடிப்படை: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தொழில் வணிகம் செழிப்பதற்கு அடிப்படையான விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
காரைக்குடி தொழில்வணிகக் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழா, இரண்டாவது மாடிக் கட்டடத் திறப்பு மற்றும் பொன்விழா மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்குடி ஞானானந்தா மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: தொழில் வணிகக் கழகத்தின் தலைவராக இருந்தவர் வள்ளல் அழகப்பர்.

வணிகரும், தொழில் முனைவோரும் எல்லா இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டும். இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டுவீச்சுக்கு ஆளான ஜப்பான், போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திப்பதற்குப் பதிலாக பொருள்கள் தயாரிப்பால் உலகத்தில் வணிகத் தொடர்பை எற்படுத்திக்கொண்டது.

தொழில் வணிகம் செழிக்க, தொழிற்சாலைகள் தொடங்க அடிப்படை விவசாயம் தான்.விவசாயிகள் செழிப்பாக இருந்தால் தான் தொழில்கள் செழிப்பாக இருக்கும்.

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து இருந்தாலும் காரைக்குடியிலிருந்து மதுரைக்கு நேரடி ரயில்பாதை இல்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைந்து செல்வதற்கு இங்கு  விமான நிலையமும் தேவை. அதற்கு அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார் பொன்னம்பல அடிகளார்.

விழாவில் கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி மெ.சொக்கலிங்கம், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா, செட்டிநாடு குழுமத்தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர்.ராமசாமி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல், தொழிலதிபர்கள் பிஎல். படிக்காசு, எஸ்.எல். என்.எஸ். நாராயணன் செட்டியார், ஏஆர். விஸ்வநாதன், செட்டிநாடு குழும இயக்குநர் ராஜாமணி முத்து கணேஷ், பேராசிரியர் அய்க்கண், நகைச்சுவை பேச்சாளர் தேவகோட்டை ராம நாதன், எஸ். முத்துராமன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

முன்னதாக காரைக்குடி தொழில்வணிகக்கழகத் தலைவர் முத்து. பழனியப்பன் வரவேற் றுப் பேசினார். செயலாளர் சாமி. திராவிடமணி செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். முன்னாள் தொழில் வணிகக் கழகத் தலைவர் எஸ்.வி.என். நாகப்பன், முன்னாள் செயலாளர் ராஜமாதவ கலாநிதி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முடிவில் தொழில் வணிகக் கழக பொருளாளர் ஜி.டி.எஸ்.சத்தியமூர்த்தி நன்றி கூறினார்

Newsletter