பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனி நபர்களுக்குச் சொந்தமான நிலத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தரிசு நிலங்களில் வரப்புகளை உயர்த்துதல், மண்புழு உரம் தயாரிப்பதற்கான அமைப்பு ஏற்படுத்துதல், பண்ணைக் குட்டைகள் அமைத்து அதில் மீன்களை வளர்க்கும் பணி ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்துடன், தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களை மேம்பாடு செய்து தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் பழ மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், அருகே உள்ள ஏரி, குளம், குட்டைகளில் இருந்து தனியார் நிலத்துக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வதற்கான கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், தங்களது பெயர்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு வேளாண் துறை இணை இயக்குநர், மீன்வளத் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆகிய அலுவலர்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Newsletter