கோவையில் தினமணி நாளிதழ் நடத்தும் நடிகர் சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியக் கண்காட்சி திங்கள்கிழமை (ஜன. 16) நிறைவடைகிறது.
நடிகரும் ஓவியருமான சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியை அவரது சொந்த ஊரான கோவையில் தினமணி நாளிதழ் நடத்துகிறது. அவிநாசி சாலையில் உள்ள பிரசிடென்ட் ஹால், ஜி.டி. அரங்கில் சனிக்கிழமை இந்த ஓவிய கண்காட்சி தொடங்கியது.
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வே.ராமசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். விழாவில், நடிகர் சிவகுமார், அவரது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி, மருத்துவ கவுன்சில் உறுப்பினரும் அஸ்வின் மருத்துவமனை, பி.பி.ஜி. நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எல்.பி.தங்கவேலு, குமுதம் ஜோதிடம் இதழ் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், நடிகர் நந்தா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கௌரவத் தலைவர் ஏ.சக்திவேல், கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், ஜி.டி. நாயுடு அறக்கட்டளைத் தலைவரும் ஜி.டி. நாயுடுவின் மகனுமான ஜி.டி.கோபால், பண்ணாரியம்மன் சுகர்ஸ் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், கொடிசியா தலைவர் டி.சுந்தரம், கவிஞர் புவியரசு, ஓம் சக்தி இதழ் இணையாசிரியர் பெ.சிதம்பரநாதன், கம்பன் கழகச் செயலர் நஞ்சுண்டன், இந்து மக்கள் கட்சி - தமிழகம் தலைவர் அர்ஜூன் சம்பத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி.ரம்யா பாரதி, காவல் துணை ஆணையர் பா.மூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பாப்டா தனஞ்செயன் செய்திருந்தார்.
இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. இதில் கோவை மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டு சிவகுமாரின் ஓவியங்களைப் பார்வையிட்டனர்.
மேலும், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சிவகுமாரின் ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் சிவகுமாரின் ஓவியங்களை ஆர்வத்துடன் செல்லிடப்பேசியில் படம் பிடித்துக் கொண்டனர். மேலும், சிவகுமாருடனும் அவரது ஓவியங்களுடனும் நின்று சுயபடம் எடுத்துக் கொண்டனர்.
இதற்கிடையே, ஓவியக் கண்காட்சியையொட்டி தினமணி சார்பில் கோவை மண்டலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் நடிகர் சிவகுமார், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியப் போட்டிகளில் முதலிடம் பிடித்த நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டினர். இந்த ஓவியக் கண்காட்சி திங்கள்கிழமை இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் விற்பனைக்கும் உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் தொகை, ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக நடிகர் சூர்யாவால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் அகரம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெ.ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியக் கண்காட்சியை தொடங்கிவைத்து ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
கூட்டத்தில் பலவகை உண்டு. சில வகை பார்க்க வரும் கூட்டம். சில வகை கேட்க வந்த கூட்டம். 24 வயதுக்கு முன்பா சிவகுமார் வரைந்த ஓவியங்களையும், திருமணத்துக்குப் பின்னர் அவர் வரைந்த 2 ஓவியங்களையும் (நடிகர்கள் சூர்யா, கார்த்தி) காண வந்த கூட்டம் இது.
லியானோர்டா டாவின்சி மிகச்சிறந்த ஓவியர், சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்தவர். அவர் ஓவியத்தை பற்றி கூறும்போது பொய் சொல்ல இடம் அளிக்கும் கலை பேச்சுக்கலை. பொய் சொல்ல இடம் அளிக்காத ஒரே கலை ஓவியம் தான் என்கிறார்.
அதேபோல உலகில் மிகவும் பிரபலமாக இருந்த தத்துவஞானி ஜான் ரஸ்கீனும், ஓவியக்கலையை அதிகமாக புகழ்ந்துள்ளார்.
2010-ம் ஆண்டில் இங்கிலாந்தின் டெய்லிமெயில் என்னும் பத்திரிகையில் உலகில் மிகச்சிறந்த 10 ஓவியர்களின் பட்டியல் இடம்பெற்றிருந்தது. 1401 முதல் 1428 வரை வாழ்ந்த மெசசியோ வரைந்த ஓவியம் மிகச்சிறந்த ஓவியமாக கருதப்படுகிறது. அதில் ஜோர்தான் நதிக்கரையில் இயேசுவின் சீடரான புனித பீட்டர் முன்னிலையில் 3 பேர் மதம் மாறும் காட்சியை அது சித்தரிக்கிறது. ஒருவர் மண்டியிட்டபோது, இன்னொருவர் உடல் நடுங்கியபடி நிற்கும் காட்சியும், மற்றொருவர் நதியில் இறங்க ஆடையை கழற்றிக்கொண்டிருக்கும் உணர்ச்சி மிகு தத்ரூபமாக இந்த ஓவியம் காட்சி அளிக்கிறது. காலத்தால் மாறாத ஓவியம் இது.
அதேபோல சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இயேசு தனது 12 சீடர்களுடன் கடைசி ராப்போஜனம் செய்த காட்சியை தத்ரூபமாக லியானோர்டா டாவின்ஸி வரைந்த ஓவியம் சிறந்த ஓவியம் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதேபோன்று 1483 முதல் 1520 வரை வாழ்ந்த ரஃபேல், 1475 முதல் 1564 வரை வாழ்ந்த மைக்கேல் ஏஞ்சலோ, 1480 முதல் 1576 வாழ்ந்த டைட்டியான், 1571 முதல் 1610 வரை வாழ்ந்த கேரவேஜ்ஜியோ, 1606 முதல் 1669 வரை வாழ்ந்த ரெம்ப்ரான்ட், 1577 முதல் 1640 வரை வாழ்ந்த ரூபன்ஸ், 1599 முதல் 1660 வரை வாழ்ந்த வேலாகியூஸ், 1881 முதல் 1973 வரை வாழ்ந்த பிகாசோ ஆகியோரின் ஓவியங்களும் மிகச்சிறந்த ஓவியமாக கருதப்படுகிறது. காலத்தால் அழிக்க முடியாதவை ஓவியங்கள் என்றார்.

அப்பாவின் ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதை பேசும்: நடிகர் சூர்யா
தினமணி சார்பில் நடைபெற்று வரும் சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியக் கண்காட்சியில் அவர் பேசியதாவது:
சிறுவயது முதல் இதுவரை எனக்கும், கார்த்திக்கும் அப்பா கற்றுக்கொடுத்த விஷயங்கள் ஏராளம். அதற்கு கைமாறாக எதுவும் திருப்பி செலுத்த முடியாது. சிறுவயது முதல் அவர் வரைந்த ஓவியங்களை அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அது வீட்டிலேயே இருப்பதால் பயனில்லை என்பதால் சென்னையில் ஓவியக் கண்காட்சி நடத்தி காட்சிப்படுத்தினோம்.
அக்கண்காட்சியை 8,000 பேர் கண்டுகளித்தனர். இங்கு குறைந்தபட்சம் 10,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஓவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதை பேசும். அப்பாவின் ஒவ்வொரு பயணத்தின்போதும் அவை வரையப்பட்டவை.
அவரின் வாழ்க்கை மிகப்பெரிய பயணம். இளவயது முதல் இதுவரை தன்னுடன் பயணித்த ஒவ்வொரு நண்பர்களுடனும் இப்போதும் தொடர்பில் அவர் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது பயணத்துடன் எங்களது பயணத்தை ஒப்பிட முடியாது. சினிமாவில் எங்களது வெற்றியை அவருடன் ஒப்பிட முடியாது.
ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதை மற்றவர்களின் இடத்தில் இருந்து அதை உற்றுநோக்குவது அப்பாவின் குணம். சுயநலம் இல்லாத குணத்தை கொண்டவர் அவர். அதனால் தான் அவர் இப்போதும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் என்றார்.
நடிகர் சிவகுமார் பேச்சு
சித்திரச்சோலை ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழாவில், நடிகர் சிவகுமார் ஆற்றிய ஏற்புரை:
நான் கோவையை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால் 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்திருப்பேன். அல்லது, மாடு வாங்கி பால் கறந்து விற்பனை செய்திருப்பேன். இல்லாவிட்டால் கோவையில் இருந்த 52 பெரிய பஞ்சாலைகளில் ஏதேனும் ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி இருப்பேன்.
ஆனால், காலம் என்னை ஓவியனாக்கிவிட்டது. சூலூரில் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அறிவியல் பாட வகுப்பில் சக மாணவர்கள் 10 பேர்களுக்கு உடற்கூறு வரைபடம் வரைந்து கொடுத்தேன். எனது வகுப்பு ஆசிரியர் அவற்றைப் பார்த்துவிட்டு எனக்கு ஓவியத் துறையில் நல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்.
இதனால் கவின் கலை கல்லூரியில் சேர்ந்து மிகுந்த சிரமத்துக்கு இடையே ஓவியம் பயின்றேன். எனது படைப்புகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு நீண்ட கதை உள்ளது. சென்னையில் பல இடங்களுக்கும் சென்று வர சிரமப்பட்ட நிலையில், ரூ.400-க்கு ஒரு சைக்கிள் வாங்கி அதில்தான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்.
அப்படி ஒரு நாள் சென்னையில் இருந்து சைக்கிளிலேயே மாமல்லபுரம் சென்று, தெரு நாய்களுடன் படுத்து உறங்கி அதிகாலை 4 மணிக்கு எழுந்து வரைந்ததுதான் மாமல்லபுரம் கடற்கரை கோயில் ஓவியம். அதைப்போலவே அங்கிருந்து கொட்டும் மழையில் நனைந்தபடி சென்று வரைந்ததுதான் திருப்போரூர் ஓவியம்.
அதேபோல், திருவண்ணாமலை கோயில் ஓவியத்தை வரையச் சென்றபோது வீட்டின் மாடியில் என்னை அனுமதிக்க வீட்டு உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். கடைசியில் ஒரு இளம்பெண் என் மீது நம்பிக்கை வைத்து அனுமதித்தார். அவரது உதவியால் திருவண்ணாமலை ஓவியம் எழுந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஓவியத்தின் பின்னாலும் எனது கஷ்டங்களும், உழைப்பும் உள்ளது.
இவ்வாறு மிகுந்த சிரமத்துக்கு இடையே 7 ஆண்டுகள் உழைப்பில் தயாரான ஓவியங்களை நான் திரைத்துறைக்கு வந்த பிறகு கிடப்பில் போட்டுவிட்டேன். பிறகு எனது மகன்களால் அதை தூசி தட்டி எடுத்து ரூ.8 லட்சம் செலவில் டிஜிட்டல் ஸ்கேன் செய்தேன். பின்னர் எனது நண்பர்களின் வற்புறுத்தலால் அதை புத்தகமாகவும் தயாரித்தோம்.
பின்னர் எஸ்.எஸ். வாசனின் உதவியால் திரைத்துறைக்குச் சென்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் எனக்கென்ற ஒரு இடத்தைப் பிடித்தேன். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தேன். பின்னர் அங்கிருந்து சித்தி, அண்ணாமலை போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தேன்.
பின்னர், கடைசியில் நடிப்புக்கு மரியாதை இல்லை என்பதை கடந்த 2005 ஜனவரியில் உணர்ந்தேன். இதனால் நடிப்பைதை கைவிட்டேன். அப்போது ஒரு ஜோதிடர், இனிதான் உங்களுக்கு உச்சம் இருப்பதாகக் கூறினார். அதன் பிறகு நடிகர் சூர்யா பள்ளியில் பரிசாகப் பெற்ற ராமாயணம் புத்தகத்தை புரட்டத் தொடங்கினேன். அதில் ஏற்பட்ட அதீத ஆர்வம் மகாபாரதத்தையும் படிக்கத் தூண்டியது.
இதையடுத்து 2006-ல் புத்தகத் திருவிழாவில் பேசத் தொடங்கினேன். எனது 67-வது வயதில் முதல் முறையாக ராமாயணத்தை படித்துவிட்டு அது குறித்து எல்லா மேடைகளிலும் பேசி வருகிறேன். என்னைச் சுற்றி எந்த ஒளிவட்டமும் இல்லை. மாறாக நாம் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக கடினமாகவும், நேர்மையாகவும் உழைத்தால் நம்மால் அதை சாதிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளேன் என்றார் அவர்.