திமுக கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில் திமுக போட்டியிட்டு வெற்றி.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று, கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கம்யூனிஸ்ட் தலைமை அறிவித்தது.
இந்நிலையில், இன்று காலை திமுக நகர செயலாளர் விசு பிரகாஷ் தலைமையில் 12 பேர் தேர்தல் அதிகாரி ஜெசிமா பானுவிடம் தலைவர் பதவிக்கு விஷ்வபிரகாஷ் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
பேரூராட்சி அலுவலகம் முன் பலர் கூடி இருந்ததால் உள்ளே வருவதற்கு சிரமமான நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் 9.30 மணி அளவில் உள்ளே வந்தனர்.
இந்நிலையில், தேர்தல் அலுவலர் 9.45 மணி அளவில் தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தேர்தல் அதிகாரி விஸ்வபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவித்தார். இதனால் அங்கிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
இதனையடுத்து, அங்கிருந்த தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சிவராஜன், மாவட்ட குழு உறுப்பினர் பால மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன் ஆகியோர் அலுவலகத்திலிருந்ததைப் பார்த்து திமுக தொண்டர்கள் பலத்த கூச்சலிட்டு எதிர்ப்பு ஆரவாரம் செய்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் பாலமூர்த்திக்கு கையில் அடி விழுந்தது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுகாதார ஆய்வாளர் அறையில் உட்கார வைக்கப்பட்டனர். பலத்த கோஷம், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
திமுக கட்சித் தலைமை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய பேரூராட்சியில், திமுக நகர செயலாளர் விஸ்வபிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.