சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொடிசியா, தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, கலந்துகொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலையையும் மற்றும் தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு கோரிக்கை மனுவை இந்திய நிதி அமைச்சரிடம் அளித்தார்.
கோவை: இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிதிநிலை அறிக்கைக்கு (2022 - 2023) பிறகான சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொடிசியா, தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு, கலந்துகொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலையையும் மற்றும் தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு கோரிக்கை மனுவை இந்திய நிதி அமைச்சரிடம் அளித்தார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நடைமுறை செலவுகளை எதிர்கொள்ளாமல் மீண்டும் தொழில் துவங்கவும், பிணையில்லா கடன் தொகைக்கு வரையறை அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறும் பொழுது தற்போது வரையறுக்கப்படும் நிபந்தனைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக உள்ளன. இதில் (DSCR) விகிதம் போன்றவை குறைக்கப்படுவதற்காகத் தனி குழு அமைக்கப்பட வேண்டும்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் பிணை உள்ளிட்ட சிரமம் அளிக்கக் கூடிய பல நடைமுறைகளைக் கையாளுவதாலும் டிஜிட்டல் முறையில் கடன்பெறும் முறை குறித்து அந்த நிறுவனங்கள் சரிவர அறியாததாலும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான மார்ஜின் தொகை 1௦% என்று வரையறை செய்யப்பட்டு நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். கடன் நடைமுறை கட்டண தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
தொழில்முனைவோருக்கு நிதியைக் கையாளுவது குறித்தும் புதிய கடன் திட்டங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
வங்கி மற்றும் நிதி
பெருந்தொற்று காலத்தில் நடைமுறை மூலதன கடன் வழங்கும் பொழுது ஓர் ஆண்டுக்கான விற்றுமுதல் அளவை கணக்கிடாமல் முன்பு வழங்கிய வழக்கமான தொகையை வழங்க வேண்டும்.
மூலதன கடன் வரையறை மற்றும் நடைமுறை மூலதன கடன் வரையறையை 40% ஆக உயர்த்த வேண்டும்.
அதற்கான மார்ஜின் தொகை 25% லிருந்து 10% ஆக குறைக்க வேண்டும்.
ஜிஎஸ்டி
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களுக்கு “இன்புட் டேக்ஸ் கிரெடிட்” அனுமதிக்கப்பட வேண்டும்.
மத்திய ஜிஎஸ்டி வரி சட்டம் 2017 பிரிவு 129ன் கீழ் விதிக்கப்படும் அபராதம் முன்பு இருந்தது போலவே குறைக்கப்பட வேண்டும்.
2017 - 2018 மற்றும் 2018 - 2019ம் ஆண்டில் தாக்கல் செய்த ஜிஎஸ்டி படிவங்களில் தற்செயலாக ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து தீர்வுகளை அளிக்க வேண்டும்.
தற்போது உள்ள 6 வகை ஜிஎஸ்டி வரிவிகிதங்களை 5%, 10%, 15% என மூன்றாகக் குறைக்க வேண்டும்.
வருமான வரி
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி 20% ஆக குறைக்கப்பட வேண்டும்.
தனிநபருக்கு விதிக்கப்படும் வரி உச்சவரம்பாக 1௦ லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 20% என்று திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
மூலப்பொருட்கள்
பொதுவாக இந்தியப் பொருளாதாரம் பெருந்தொற்று காலத்திலிருந்து மீண்டு வந்தாலும் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ந்து உயர்ந்து வரும் மூலப்பொருள் விலைகளும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைக் கடமையாகப் பாதித்துள்ளன.
எனவே இது குறித்த தீர்வு காணவும், (SAIL) போன்ற அரசு நிறுவனங்கள் மூலப்பொருட்களை வழங்கும்படி செய்யவும், விலை உயர்வு கட்டுப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்து மூலப்பொருள்களையும் வெளிநாடுகளிலிருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
இரும்புத்தாது, ஸ்டீல், காகிதம், பிளாஸ்டிக் மற்றும் பருத்தி ஆகியவற்றுக்கு ஏற்றுமதி தடை விதிக்க வேண்டும்.
கோவையில் இயங்காமல் மூடப்பட்டிருக்கும் SAIL, மூலப்பொருள் வழங்கு நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
கிடங்கு வசதி
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ள பொருட்களைப் பாதுகாக்கும் வகையில், மானிய விலையில் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
உட்கட்டமைப்பு
வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரங்களின் ஒன்றாகக் கோவை திகழ்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்த வேண்டியது அவசியமாகும். கோவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெரும் தொழிற்சாலைகள் இங்கு வருவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
கோவை - மதுரை, கோயம்புத்தூர் - கருர், கோயம்புத்தூர் - ஓசூர் தொழில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 ஆண்டுகளில் இருமடங்காகும்.
தற்போது நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளான மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
கொச்சின் எல்லை சாலை - பல்லடம் முதல் மதுக்கரை வரை உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலையாக்கப்பட வேண்டும்.
பல்லடம் முதல் சிந்தாமணிபுதூர் வரையிலான சாலை அகலப்படுத்தப்பட்டு நான்கு வழிச்சாலை ஆக்கப்பட வேண்டும்.
எல் அண்டு டி பைபாஸ் சாலையில் (NH 544) நீலம்பூர் முதல் மதுக்கரை வரை 6 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்.
சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட வேண்டும். சத்தியமங்கலம் சாலை அகலப்படுத்தப்பட்டு குரும்பபாளையத்தில் இருந்து நான்கு வழிச் சாலையாக்கப்பட வேண்டும்.
நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பேருந்து முனையம் அமைய முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அனைத்து நான்கு வழிச்சாலைகளையும் ஆறு வழிச்சாலைகளாக மாற்றும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ரயில் சேவை
அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, தொண்டாமுத்தூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்களை உருவாக்க வேண்டும் .
கோவையிலிருந்து சென்னை பெங்களூரூ, திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலிக்குக் கூடுதல் இரவு நேர புல்லட் ரயில்கள் மிகவும் அவசியமாகும்.
கோவையின் உடனடி தேவைகளில் ஒன்றாகப் புறநகர் வட்ட ரயில் சேவை இருக்கிறது.
விமானச் சேவை
கோவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. மருத்துவ சுற்றுலா, ஜவுளி துறை, மென்பொருள், கல்வி என்று பல துறைகளிலும் இப்பகுதி வளர்ந்து வருகிறது. தற்போதைய ௯ழலில் விமானச் சேவை பற்றாக் குறையால் கடம் சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவையிலிருந்து டெல்லி, மும்பை, பூனே, அகமதாபாத் கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லங்கா, ஏர் அரேபியா அண்டு எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் இங்கிருந்து சர்வதேச விமானச் சேவை அளிக்கத் தயாராக உள்ளன. ஆகவே கோவை விமான நிலைய ஓடுபாதை அதற்கேற்ப அகலப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டு கோடி பயணிகளுக்கான சேவை சரக்கு பெட்டக வசதி, விமானப் பராமரிப்பு அமையங்கள், விமானப் படை, தளவாட தொழிற் சாலைகள் என்று பல வகையிலும் பயன்பெறும் விதத்தில் 4,00௦ ஏக்கர் பரப்பளவில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கிட அரசாங்கம் ஒரு வரைவு திட்டத்தை உருவாக்க வேண்டும். தற்போது வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் இப்பகுதியில் உள்ள தொழில் வணிக பெருமக்கள் கொச்சின் விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.