உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி மற்றும் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.
கோவை: கோவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்தாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், "நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!" என்ற வசனங்களுடன் திமுகவினர் கோவையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
முதல்வர் பதவி ஏற்றபின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்று கட்சியினர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
அதன்படி, நாளை முதல்வரின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் முதல்வரின் சிறு வயது முதல் தற்போது முதல்வர் பதவி வரை புகைப்பட தொகுப்பு அடங்கிய 70 புகைப்படங்கள் கொண்ட சுவரொட்டிகள் உக்கடம், இரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தெரிவிக்கும் வகையிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், கோவை உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதை பறைசாற்றும் வகையில் "நெருப்புடா! இனி தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்!" என்ற சுவரொட்டிகளை மாவட்ட திமுகவினர் ஓட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.