மேலும், திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.
கோவை: கோவை இனி முதல்வர் ஸ்டாலின் கோட்டை என்றும் இனி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் அதை நிச்சயம் உணர்த்துவார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் மாமன்ற, நகர்மன்ற மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறியதாவது;
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 96 விழுக்காடு வெற்றி பெற்று இருக்கின்றோம். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை பணிகளும் செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.
மேலும், இன்றைய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான பிரதிநிதிகளுடன் சந்திப்பில் அந்தந்த வார்டுகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள் தயாரிக்கச் சொல்லி இருக்கின்றோம் என தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான பணிகளை தயாரிக்க தெளிவான திட்டமிடப்படுகின்றது. இது போன்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் பட்டியல் தயார் செய்து சிறப்பு நிதி பெற்று மாவட்டம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோவை மாவட்டத்தில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையானது நடைபெற்று வருகின்றது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் செயற்கை இயற்கை என்று எதுவும் இல்லை. கோவையில் வித்தியாசம் பார்க்காமல் தமிழக முதல்வர் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி மாவட்டம் வாரியாக பரிசுகள் வழங்கப்படும் என்றார்.
கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளிக்கும் என தெரிவித்தார். சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்க மேற்கொள்ளும் பணிகள் முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப கடிதத்தை அளித்து வருகின்றனர். கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் சொல்லவில்லை. சில அதிமுகவினர் மட்டுமே சொல்கின்றனர். கோவை இனி முதல்வர் ஸ்டாலின் கோட்டை. இனி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் அதை நிச்சயம் உணர்த்துவார்கள் என தெரிவித்தார்.
மின் இணைப்புக்கு ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை கொண்டு வர திட்டமா?
கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் மற்றும் விநியோகத்திற்கான திட்டங்கள் எதுவும் செய்யப்படவில்லை. திமுக அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான மின்தேவையை கணக்கிட்டு உற்பத்திக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றது. மாவட்டம் தோறும் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் முதல் சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட இருக்கின்றது. மேலும், குறிப்பிட்ட ஆதார் இணைப்பு உட்பட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மின் வாரியத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றது எனவும், 216 மின் துணை மின்நிலையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என தெரிவித்தார். ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8905 மின்மாற்றி அமைக்கும் பணி அடுத்த 15 நாட்களில் நிறைவடையும் என தெரிவித்தார். மின்சார வாரியத்தை பொறுத்த வரை உடனடியாக இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு விவசாயிக்கு 3, 4 இடங்களில் நிலங்கள் இருந்தாலும் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும், மேலும் மின்சார துரையில் ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறை தொடரும் எனவும் தெரிவித்தார்.
மின்வாரியத்தின் விரைவான பணிகளை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இலவச இணைப்பு கிடைக்காதா என்று விவசாயிகள் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் அனைத்து விவசாயிகளும் பலனடைந்து வருகின்றனர் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.