கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடியதாக தகவல்.
கோவை: கோவையில் அஜித்குமார் நடித்த திரைப்படமான " வலிமை",வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் இன்று, பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் ஆனதையடுத்து, கோவையில் அஜித் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாடங்களைஆரம்பித்து உள்ளனர்.இன்று முக்கிய திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள படத்தை காண காலை முதலே ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை முதல் கட்சி பார்க்க ரசிகர்கள் குழுமியிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு திரண்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாக நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு காத்திருந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் காலை 5 மணிக்கு காட்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 4.30 மணி வரை ரசிகர்களை திரையரங்குக்கு அனுமதிக்காததால் ரசிகர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது ஏறி எட்டி குதித்து திரையரங்கிற்குள் நுழைந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, 5 மணிக்கு காட்சி துவங்கியதும், ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்த அந்த குண்டு காரணமாக இருசக்கர வாகனம் ஒன்று லேசான சேதம் அடைந்தது.
உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அந்த வாகனத்தை தள்ளி நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்திவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.