திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோவை பாபு என்கிற செல்வகுமார் வெற்றி பெற்று 25-ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை திமுகவின் வசமாக மாற்றியுள்ளார்.
கோவை: திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோவை பாபு என்கிற செல்வகுமார் வெற்றி பெற்று 25-ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை திமுகவின் வசமாக மாற்றியுள்ளார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. முன்பு கோவை மாநகராட்சி 32-வது வார்டு உட்பட்ட பகுதியாக இருந்தபோது 25-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தனர்.
தற்போது வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் கோவை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியாக சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் உள்ளது. மொத்தம் 13,788-வாக்காளர்கள் உள்ளனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சேரன்மாநகர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் ஏ பி சி என மொத்தம் 568-வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிகச் சில வீடுகள் மட்டுமே இருந்தன.
ஆனால் தற்பொழுது சேரன் மாநகர் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் மட்டுமின்றி ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான வணிக நிறுவனங்கள் புதிதாகத் துவக்கப்பட்ட செயல்பட்டு வருகின்றன.
அவிநாசி ரோட்டில் இருந்து சத்தி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்டவற்றுக்குச் செல்வதற்கு விளாங்குறிச்சி ரோடு உதவுகிறது. இது தவிர தண்ணீர்ப்பந்தல் அருகே அமைந்துள்ள ஸ்டீல் வினியோகம் செய்யும் தொழில் நிறுவனம் சார்பில் மிக பெரிய கனரக வாகனங்கள் விளாங்குறிச்சி ரோடு வழியாக தினமும் பலமுறை இயக்கப்படுகின்றன.
இது தவிர இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் என தினமும் விளாங்குறிச்சி ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விளாங்குறிச்சி ரோடு சீரமைக்கப்படாத காரணத்தால் குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகப் பயணிக்கவே முடியாத அளவு மோசமான நிலையில் ரோடு காணப்படுகிறது.
விளாங்குறிச்சி ரோட்டின் அவலநிலையை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பரவத் துவங்கியுள்ளது.
சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் பிரச்சினை அதிகம் உள்ளது.
பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகக் குடியிருப்பு பகுதியின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இது தவிர குப்பைகள் சரிவர அப்புறப் படுத்தப் படுவதில்லை என்ற புகாரும் இப்பகுதியில் உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள ரோடு மோசமான நிலையில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதி அதிமுக வசம் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிக்குள் சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வந்தன.
பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதும் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,க்களாக அதிமுகவைச் சேர்ந்த ஜெயராம் மற்றும் அருண்குமார் உள்ளிட்டோரை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இருப்பினும் மோசமான ரோடு சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து காணப்படுவது சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது. இப்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் என்ற வேட்பாளர் டெபாசிட் தொகையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோவை பாபு என்கிற செல்வகுமார் வெற்றி பெற்று 25 ஆண்டுகளாக அதிமுக வசமிருந்த சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை திமுகவின் வசமாக மாற்றியுள்ளார்.
தேர்தலில் வென்று சாதனை படைத்து இருந்தாலும் புதிய திமுக வார்டு கவுன்சிலர் கோவை பாபு என்கிற செல்வகுமாருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது எதிர்வரும் நாட்களில் அவரின் செயல்பாட்டில் தெரியவரும்.