கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதித்தது. இதற்கு இஸ்லாம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து செல்லும் பொழுது சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து அம்மாணவியின் பின்னால் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.
அப்பொழுது அந்தப் பெண் தனியாளாக அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்டபடி நடந்து செல்கிற வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வெளியான நிலையில், இச்சம்பவத்திற்கு பெரும்பாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகக் கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கர்நாடக அரசைக் கண்டித்தும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் தெரிவித்த அவர்கள் ஹிஜாப் அணிவது என்பது எங்கள் மத கோட்பாடு என்றும் தெரிவித்தனர். மேலும் ஹிஜாப் அணிவதால் பிறருக்கு ஏன் கோபம் வருகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.